திமுக  பணக்காரர்களுக்கான கட்சி எனவும்,  அதிமுக ஏழைகளுக்கான கட்சி எனவும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இன்றும் நாளையும்  தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது . அதன்படி இன்று காலை 10 மணிக்கு விருப்ப  மனுவினியோகம் தொடங்கியது. 

இந்நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பூர்த்தி செய்த மனுக்களை நாளை மாலை 5 மணிக்குள்  வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் சென்னையில் ஐந்து இடங்களில் விருப்ப மனுக்கள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. அதில் கலந்துகொண்டு  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விருப்ப மனுக்களை வழங்கினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  திமுக பணக்கார கட்சி என்பதால் மேயர் பதவிக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்து உள்ளதாக குறிப்பிட்டார்.  ஆனால் அதிமுக ஏழைகளுக்கான கட்சியாக இருப்பதால் குறைந்த தொகையே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் .  அதேநேரத்தில் தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது உண்மை என்றால்,  நோட்டாவிற்கு தான் அதிக வாக்குகள் விழுந்திருக்கும் என்றார். 

மக்கள் தங்களுக்கு விருப்பமுள்ள கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தி உள்ளனர் என்றார்.  அதற்கு  எடுத்துக்காட்டுதான் நடந்துமுடிந்த இடைத்தேர்தல்கள் எனவும் குறிப்பிட்டார்.  எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு தகவல்கள் ஏதும் தெரிவதில்லை என்றும்,  மற்றவர்கள் எழுதிக் கொடுப்பதை அவர் படித்துவிட்டு போகிறார் எனவும் ஸ்டாலினை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.