dmk filed petition in high court as rk nagar voting has to be live telecast

ஆர்.கே.நகரின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடக்கும் வாக்குப்பதிவை இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனக்கோரி திமுக வேட்பாளர் மருது கணேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக வேட்பாளர் மருது கணேஷ், சுயேட்சையாக போட்டியிடும் தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் ஆகிய மூன்று தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகருக்கு நடக்க இருந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனால், இந்தமுறை பணப்பட்டுவாடாவைத் தடுத்து நேர்மையான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

போலி வாக்காளர்கள் நீக்கம், வெளி மாவட்ட வாகனங்களுக்கு கட்டுப்பாடு, வேட்பாளருடன் அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும், மாலை 5 மணிக்கு மேல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு அதிரடியான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. 

பொது, செலவின, காவல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு ஆர்.கே.நகர் பிரசாரக் களம் கண்காணிக்கப்படுகிறது. 

இப்படி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நியாயமான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. எனினும் பணப்பட்டுவாடா பல்வேறு நூதன முறைகளில் நடைபெறுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், திமுக வேட்பாளர் மருது கணேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ஆர்.கே.நகரில் போதுமான அளவுக்கு துணை ராணுவப்படையினரை பணியமர்த்த வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அனைத்து வாக்கு சாவடிகளிலும் வாக்குப்பதிவை இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.