உள்ளாட்சித் தேர்தலை 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நடத்தவில்லை என்று கூறி மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி மீது திமுக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழகத்தில் தொடர் இழுபறிக்குப் பிறகு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. வார்டு மறுவரையறை செய்யப்படாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தை திமுக நாடியது. இந்த வழக்கில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வார்டு மறுவரையறை செய்து தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதிக்காததால்,  உள்ளாட்சித் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கின.


இந்நிலையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்ட நிலையில், திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பை திமுக வழக்காக தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், “தமிழக உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை  மாநில தேர்தல் ஆணையம் முழுமையாகச் செயல்படுத்தவில்லை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படவில்லை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புபடி இடஒதுக்கீடு, வார்டு மறுவரையறையும் செய்யப்படவில்லை.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு பிறகு ஏற்கனவே இரண்டு முறை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திமுக, தற்போது மூன்றாவது முறையாக தேர்தல் ஆணையருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.