நடிகைகளை ஆபாசமாக பேசிய வழக்கு..! குஷ்பு, நமீதாவிடம் மன்னிப்பு கேட்ட திமுக பேச்சாளர்
பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரிடம் மன்னிப்பு கோரி திமுக பேச்சாளர் சைதை சாதிக் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இதனையடுத்து முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
திமுக பேச்சாளரின் ஆபாச பேச்சு
திமுக சார்பாக சென்னை சைதாப்பேட்டையில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவைச் சேர்ந்த பிரபல நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சைதை சாதிக் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சைதை சாதிக்கை கண்டித்தார். மேலும் இந்த சம்பவத்திற்கு வருத்தமும் தெரிவித்து இருந்தார்.
மன்னிப்பு கேட்க உத்தரவு
இந்தநிலையில் பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாக பேசியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் முன்ஜாமீன் கோரி சைதை சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, பெண்கள் குறித்து மனுதாரர் அவதூறான கருத்துக்களை தெரிவித்து இருப்பதால், இனிமேல் இதுபோல் பேசமாட்டேன் என, அவர் அந்த நடிகைகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மன்னிப்பு கேட்ட திமுக நிர்வாகி
இதனையடுத்து நேற்று வழங்கு விசாரணை வந்த போது திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜக நடிகைகளான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரிடம் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். பிரமாண பத்திரத்தை ஏற்ற நீதிமன்றம், விசாரணை அதிகாரி முன்பு ஒரு வார காலத்திற்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.
இதையும் படியுங்கள்
அதிமுகவை நம்பி வந்தால் கரை சேர்ப்போம்.! நம்பாமல் இருந்தால் ஆற்றிலே விட்டு விடுவோம்- செல்லூர் ராஜூ