திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கங்கத்தை அதிமுக பக்கம் இழுக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்ட கே.பி.ராமலிங்கம், அனைத்துக்கட்சி கூட்டம் தேவையில்லாதது என்றும், 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார். 

மேலும், கொரோனா' வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற, பிரதமரும், முதல்வரும் சிறப்பாக செயல்படுகின்றனர் என்றார். இதனையடுத்து, அவரது அறிக்கை கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர், விவசாய அணி மாநில செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், திமுக அடிப்படை உறுப்பி னர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் அதிரடியாக விடுவிக்கப்பட்டார். இதனால், தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். 

இந்நிலையில், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு கே.பி.ராமலிங்கத்தை அதிமுகவிற்கு கொண்டு வர முதல்வர் எடப்பாடியின் நம்பிக்கைகுரியவர்களான  கொங்கு மண்டல அமைச்சர்கள் வலை விரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.