திமுக தலைவர் கருணாநிதி வழும்போதும் சரி, அவர் மறைந்த பின்னரும் சரி, அவரைப் பற்றி பலர் பல பிரமிக்கத்தக்க தகவல்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.  சாமானியர்கள் முதல், பிரபலங்கள்வரை அவருடன் தங்களுக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்களையும் நெகிழ்ச்சியான தருணங்களை பதிவு செய்து வரும் நிலையில், திமுக முன்னாள் அமைச்சரும். கருணாநிதியுடன் நெருங்கிப் பழகியவருமான தங்கம் தென்னரசு கருணாநிதியுடன் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத ஒரு அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதன் விவரம்:-

சில வருடங்களுக்கு முன்னால் நானும், மாவட்டச் செயலாளர் அண்ணன் கே .கே.எஸ்.எஸ்.ஆர் .அவர்களும்    அறிவாலயம் போயிருந்தோம் .இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் அண்ணன். சுப .தங்கவேலன், அமைப்பு செயலாளர் அண்ணன் டி .கே .எஸ்.இளங்கோவன் போன்றோர் அங்கே இருந்தார்கள் . வழக்கம் போல தலைவர் கலைஞர், கழக முன்னோடிகளுடன்  வந்தார்; வெளியே எங்களைப் பார்த்தவர்,  " என்ன,எப்போ வந்தீங்க ?" என்று கேட்டுவிட்டு அறைக்குள் அழைத்து மாவட்ட நிலவரங்களை விசாரித்துக் கொண்டிருந்தார் . அப்போது உள்ளே வந்த அவரது தனி உதவியாளர் திரு.நித்தியா ஒரு டப்பாவைத் தலைவர் அருகில் உள்ள டீப்பாயில் வைத்து விட்டு சென்றார்.

 

சிறிது நேரத்தில் பேசிக்கொண்டே தலைவர் அவர்கள் அதன் மூடியைத் திறக்க முயற்சித்தார். அழுத்தமாக மூடி இருந்ததால் உடனே திறக்க வரவில்லை . சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த நான் இதை கவனித்து விட்டு அவர் அருகே சென்று டப்பாவின் மூடியைத் திறந்து, தலைவர் பக்கத்தில் வைத்தேன் . உள்ளே சில ஆப்பிள் துண்டுகள் இருந்தது . திரும்பி  இரண்டடி நடந்திருப்பேன்...

" தென்னரசு .."தலைவர் கலைஞரின் குரல் பின்னால் கேட்டது." ஐயா " "இந்தாயா ...அங்கேருந்து வந்து மூடியத் திறந்து உதவி பண்ணிருக்கே இல்லே " என்று சொல்லி விட்டு சில ஆப்பிள் துண்டுகளைக் கையில் அளித்தார் ...நான் ஒரு நிமிடம் திகைத்துப் போய் நின்றிருக்க , சட்டென்று சிரித்துக் கொண்டே சொன்னார் ," 'பழம் பெரும் ' தலைவரிடம் இருந்து ' பழம் பெறும் ' தொண்டன்யா  நீ "தலைவர் கலைஞரின் சொல்லாடல் நயமும் ,சிரிப்பும் எல்லோருக்கும் தொற்றிக்கொள்ள அறை  முழுக்க சிரிப்பலை பரவியது ...என்று கருணாநிதியின் நினைவலைகளை அவர்  பகிருந்துள்ளார்.