* நதி நீர் இணைப்பு திட்டமென்பது நாட்டிற்கு தேவையான திட்டம். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கும் போது, நதிநீர் இணைப்பு குறித்து நாங்கள் நிச்சயம் வலியுறுத்துவோம்: பிரேமலதா. (மோடி மீண்டும் பிரதமராக....அப்ப இன்னும் அஞ்சு வருஷத்துக்கு இந்த நதிநீர் இணைப்பு பற்றி பேசமாட்டோமுன்னு சொல்றீங்களா பிரேமாக்கா?ன்னு தி.மு.க.காரங்க உங்களை கிண்டலடிக்கிறாய்ங்க.)

* தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் செயல்களுக்கு மத்தி மற்றும் மாநில அரசுகள் துணை போகாமல், நீதிமன்றம் மூலம் தடை பெற வேண்டும்: செ.கு.தமிழரசன். (என்னண்ணே, கமல் கூட்டணியில ஐக்கியமாகி, உலகநாயகனுக்கு ‘மக்கள் நாயகன்’ அப்படின்னு பட்டம் கொடுத்த கையோடு காணாமல் போனீங்க, இப்ப கமலையே வெச்சு செய்யுற நேரத்துலதான் மறுபடி வெளியில வந்திருக்கீங்க.)

* தமிழக தேர்தல் அதிகாரி ஒழுங்காக நடந்து கொள்ளாத காரணத்தினால், வேறொரு  அதிகாரியை பார்வையாளராக நியமித்து, வாக்கு எண்ணிக்கையை நடத்திட வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன். (நீங்க மாநில செயலாளரா இருந்தப்ப கூடத்தான் உங்க இயக்கம் எங்கேயும் ஜெயிக்கலை. அதுக்காக நீங்க ராஜினாமா பண்ணுனீங்களா? இல்ல உங்களை விலக்கிதான் வெச்சாங்களா? அதென்னங்க காம்ரேட், உங்களுக்கு ஒரு நியாயம், சத்யாவுக்கு ஒரு நியாயமா?)

* ராஜிவ் கொலை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரை விடுதலை செய்ய, உச்சநீதிமன்றமே பச்சைக் கொடி காட்டிய பிறகும், தமிழக கவர்னர் மவுனம் சாதிப்பது வருத்தத்திற்குரியது: துரைமுருகன். (மெய்யாலுமாண்ணே! நம்ம கதிர் ஆனந்து இப்படி எம்.பி.யாகாம தடுத்து நிறுத்திப்போட்டானுவலே, அதை விடவாண்ணே இந்த வருத்தம் உங்களுக்கு பெருசாஇருக்குது?)

* அரசியல் வியாபாரியான செந்தில்பாலாஜிக்கு, கடந்த தேர்தலில் இங்கே வாக்கு கேட்டதை நினைத்தால் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது, அவமானம்: அமைச்சர் தங்கமணி. (சட்டசபையின் நட்ட நடுவுல நின்னு,கழகத்தின் புரட்சித்தலைவி அம்மா உள்ளிட்ட அமைச்சரவையை பார்த்து நாக்கை துருத்துன விஜயகாந்தின் மச்சானுக்கு இப்ப ஓட்டு கேட்டது மட்டும் பரவச ஆனந்தத்தை தருதாண்ணே?)