நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி என்கிற பேச்சே கூடாது என்று நிர்வாகிகளிடம் பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க –தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து பா.ம.க களம் இறங்கியது. போட்டியிட்ட தொகுதிகளில் தருமபுரியில் அன்புமணி தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் பா.ம.க தோல்வியை தழுவியது. தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து பா.ம.க. களம் இறங்கியது. ஒரு தொகுதியில் கூட பா.ம.க வேட்பாளர்களால் வெற்றி பெற முடியவில்லை.பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாசால்கூட வெற்றி பெற முடியவில்லை. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தற்போதுள்ள எம்.பி தொகுதியையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் கூட்டணி அவசியம் என்கிற முடிவுக்கு பா.ம.க. வந்துள்ளது. ஆனால் யாருடன் கூட்டணி என்கிற கேள்வி எழும் போது தான் பா.ம.க. மூத்த நிர்வாகிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.கடந்த சில வருடங்களாகவே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை அன்புமணி கடுமையாக விமர்சித்து வருகிறார். மு.க.ஸ்டாலின் தன்னுடன் நேருக்கு நேர் விவாத்திற்கு வர வேண்டும் என்றெல்லாம் சவால் விடுத்து பார்த்துவிட்டார். இதனால் தி.மு.க –பா.ம.க இடையே கூட்டணி மலர்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. அதே போல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று அன்புமணி நினைத்து கூட பார்க்கமாட்டார். மீதம் இருப்பவர்களில் பா.ஜ.க. மற்றும் தே.மு.தி.க. இவர்களுடன் கூட்டணி வைப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்கிற முடிவுக்கு பா.ம.க வந்துவிட்டது. எஞ்சியிருப்பவர்களில் டி.டி.வி. தினகரன் மட்டுமே பா.ம.க.வுக்கு தோதான ஆளாக இருக்கிறார். தினகரனும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து யோசித்து வருகிறார்.  மேலும் அ.தி.மு.கவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளுடனும் நல்லுறவுடன் இருக்கவே தினகரன் விரும்புகிறார். அண்மையில் கமல் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்திற்கு கூட தனது பிரதிநிதியாக தங்கதமிழ்செல்வனை தினகரன் அனுப்பி வைத்தார். அந்த கூட்டத்தில் பா.ம.க சார்பில் அன்புமணி கலந்து கொண்டிருந்தார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் தினகரனுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டால் என்ன? என்று அன்புமணி யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.