அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்,  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தல் முரசொலி பவளவிழா குறித்தும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முரசொலி நாளிதழின் பவள விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில், பவள விழா காட்சியகம் தொடங்கப்பட்டது. இந்த காட்சியகத்தை இந்து என். ராம்  தொடங்கி வைத்தார்.

இந்த காட்சி அரங்கத்தில், திமுக தலைவர் கருணாநிதியின் மெழுகு பொம்மை வைக்கப்பட்டுள்ளது. மேலும், கருணாநிதியின் கடிதங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

நேற்று மாலை, சென்னை கலைவாணர் அரங்கில் பவள விழா நடைபெற்றது. இந்த விழாவில் பத்திரிகையாளர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில், இன்று காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகள் நொடிக்கு நொடி மாறி வருகின்றன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் இடையேயான அதிகார மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில், இன்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.