திமுகவில் இணைவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில் திடீரென அந்த முடிவில் இருந்து அன்வர் ராஜா பின்வாங்கியதன் பின்னணி தெரியவந்துள்ளது.

அதிமுக மற்றும் அமமுகவில் அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை ஸ்கெச்ட் போட்டு தூக்கும் பொறுப்பு அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர மாநில அளவில் முக்கிய நிர்வாகிகளை திமுகவிற்கு அழைத்து வரும் வேலையை செந்தில் பாலாஜி, தங்கதமிழ்ச் செல்வன் செய்து வருகின்றனர். 

அந்த வகையில் அண்மையில் அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏவின் சகோதரரும் புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளராகவும் இருந்த பரணி கார்த்தி திமுகவில் இணைந்ததன் பின்னணியில் தங்கதமிழ்ச் செல்வன் இருப்பதாக சொல்லப்பட்டது. இதே போல் பரணி திமுகவில் இணைந்த நாளிலேயே அன்வர் ராஜாவும் திமுகவில் ஐக்கியமாக உள்ளதாக தகவல்கள் பரவின. இது குறித்து விசாரிக்க அன்வர் ராஜாவை தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் பிடிகொடுக்கவில்லை. 

இதனால் ராமநாதபுரத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் அன்வர் ராஜா திமுகவில் இணைவது உறுதி என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் மறுநாள் காலையில் தான் திமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் தவறு என்று அன்வர் ராஜா விளக்கம் அளித்தார். முதல் நாள் முழுவதும் அவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் றெக்கை கட்டி பறந்த நிலையில் மறுநாள் தான் அன்வர் ராஜா அந்த தகவலை மறுத்துள்ளார். 

இதற்கு காரணம் முதல் நாள் இரவு வரை சுமூகமாக சென்று கொண்டிருந்த பேச்சுவார்த்தை திடீரென பின்னடைவை சந்தித்ததாக சொல்கிறார்கள். கட்சிப் பதவி மற்றும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தொடர்பாக அன்வர் ராஜா மிகவும் உறுதியாகவும் அதிகமாகவும் எதிர்பார்த்ததாக சொல்கிறார்கள். தன்னுடைய நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்த காரணத்தினால் தான்திமுகவில் இணையவில்லை என்கிறார்கள். ஆனால் பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறதாம்.