தமிழக சட்டப்பேரவை எத்தனையோ வரலாற்றுச் சிறப்பு மிக்க நாட்களை சந்தித்திருக்கிறது. அதில் மிக முக்கியமான நாள், நேற்று! அதாவது 03-01-2019. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவு மீது இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து, அதன் மீது ஆளுங்கட்சியின் இரு முதல்வர்களும் மிக மிக சிறப்பான உரையை, வெகு பரந்த மனப்பான்மையுடன் ஆற்றியிருக்கின்றனர். 

கட்சி பாகுபாடுகளை கடந்து, தேர்ந்த அரசியல்வாதிக்கு மிகச் சிறப்பான மரியாதையை செலுத்தியதற்காக பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இருவரை நோக்கியும் தமிழகம் தலைநிமிர்ந்து புன்னகைக்கிறது பெருமிதமாக. கட்சியை, கொள்கையை மையப்படுத்தி ஆயிரம் சண்டைகள் போட்டுக் கொண்டாலும் கூட வட இந்தியாவில் அரசியல் நாகரிகம் வேற லெவலில் இருக்கும். பாராளுமன்ற மைய மண்டபத்தினுள் மோடியை சரமாரியாக கேள்வி கேட்டு தாக்கிடும் வகையில் கத்தையான ஆதாரங்களுடன் வருவார் ராகுல். மன்ற வளாகத்தினுள் எதிர்பாராமல் மோடியை சந்திக்க நேர்ந்தால், துளியும் கலப்படமில்லாமல் கட்டித் தழுவி நலம் விசாரித்துக் கொள்வார்கள் இருவரும். ஆனால் மன்றத்தினுள் மூர்க்கமாக கருத்துச் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஆக கட்சி தனி, தனி மனித நட்பு தனி! என்பதில் தெள்வாய் இருக்கிறார்கள் எப்போதும். 
 
ஆனால் தமிழகத்தில் இந்த அரசியல் ஜனநாயகம் கருணாநிதி, எம்.ஜி.ஆர். இருவரும் இளம் தலைவர்களாய், நடுத்தர வயது தலைவர்களாய் இருந்தபோது காணப்பட்டதுதான். ஆனால் ஜெயலலிதாவின் அரசியலின் போது இந்த நிலை முற்றிலுமாக மாறியது. ’கருணாநிதி ஒரு தீய சக்தி!தி.மு.க. நம் நிரந்தர எதிரி!’ இதைத்தான் தன் அரசியல் தாரகமந்திரமாக வைத்திருந்தார் ஜெ., 

அவரது நிலைப்பாடும் ஓரளவு சரிதான். காரணம், இவ்வளவு கெடுபிடியாய் இருந்தும் கூட மாவட்டங்களில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் அண்டர்கிரவுண்டில் அண்ட்கோ போட்டு காசு பார்ப்பதோடு, கட்சியையும் அழித்தனர். இதனாலேயே இந்த நட்பை வெறுத்தார் ஜெ., கருணாநிதி அந்த நட்புக்கரத்தை நீட்டிட தயாராய் இருந்தாலும் கூட ஜெயலலிதாவின் பிடிவாதம் இவரையும் ஈகோ பார்க்க வைத்தது. அந்த ஜெயலலிதாவும் அடுத்து கருணாநிதியும் மறைந்துவிட்ட சூழலில், 2016 தேர்தல் மூலம் அமைந்திருக்கும் சட்டமன்றத்தின் மறைந்த எம்.எல்.ஏ. எனும் முறையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நேற்று சபையில் கொண்டுவரப்பட்டது. 

சம்பிரதாயத்துக்கு கொண்டுவந்து, ஏதோ நாலு வார்த்தை புகழ்ந்துவிட்டு கடந்து சென்றுவிடுவார்கள்! என்றுதான் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் நினைத்தனர். ஆனால் பழனிசாமி, பன்னீர்செல்வம் என இரு முதல்வர்களும் கருணாநிதியை வானுயர புழழ்ந்து பேசி தி.மு.க.வினரை கண்ணீர் வடிக்க வைத்து, ஸ்டாலினை கைகூப்ப வைத்துவிட்டனர். 

அதிலும் முதல்வர் பழனிசாமி...”அரசியல்வாதி மட்டுமில்லை, இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் தனிமுத்திரை பதித்தவர் அவர். கருணாநிதியின் ஆட்சியில் தீட்டப்பட்ட சில திட்டங்களையும், சட்டங்களையும் மக்கள் நலன் கருதி, அ.தி.மு.க. சார்பில் வரவேற்றுள்ளோம். எளிய தோற்றம், இனிய பண்பு, எல்லோரையும் அரவணைத்து செல்லக்கூடிய குணம் ஆகியவை அவரிடம் அமைந்திருந்தன. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு முதல், தற்போதைய பிரதமர் மோடி வரை அனைவரையும் கண்ட பெருமைக்குரியவர். 

ஒருவர் பிறக்கிறா, வாழ்கிறார், மறைகிறார். ஆனால் அந்த இடைப்பட்ட காலத்தில் செய்த சாதனை என்றைக்கும் இந்த மண்ணிலே நிலைத்திருக்கும். அந்த வகையில் கருணாநிதி செய்த சாதனை இந்த மண்ணில் நிலைத்திருக்கும்.” என்று மரியாதை மழை கொட்டிவிட்டார். தொடர்ந்த துணைமுதல்வர் பன்னீரோ “கருணாநிதி 94 ஆண்டுகள் தன் நாட்டுக்காகவும், தன் கட்சிக்காகவும் அயராது உழைத்தவர். மன உறுதி, தன்னம்பிக்கையை கொண்ட தலைவர். பன்முக ஆற்றல் கொண்டவர். அவர் முதல்வராக இருந்தபோது இலங்கைப் போரில் துயரப்படும் தமிழர்களுக்காக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினேன். 

இதற்காக மறுநாள் தி.மு.க.வின் நாளிதழில் ‘பச்சை தமிழர் பன்னீர்செல்வம்’ என்று என்னை குறிப்பிட்டனர். மறுநாள் அவையில் இதை நான் குறிப்பிட்ட போது,  தெளிவான விளக்கம் சொன்னார். மிகச் சாதுர்யமான அரசியல்வாதி.” என்று முடித்தார். கருணாநிதி ‘இறந்தார்’ எனும் தகவல் கேட்ட நொடியில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எப்படி கரைந்தனரோ அதே ஒரு சூழலை நேற்று அ.தி.மு.க. அமைச்சரவையும், எம்.எல்.ஏ.க்களும் கொண்டு வந்து உருக வைத்துவிட்டனர். முதல்வர்களின் இந்த திடீர் பண்புக்கு பின்னணி, முன்னணி என்று கண்டதையும் விவாதித்து அதற்கு வேறு சாயம் பூசாமல், அதை அப்படியே வரவேற்போம்! சபையில் நாகரிகமும், பெருந்தன்மையும் தழைத்தோங்கட்டும். இரு தரப்பும் இயைந்து நடந்தால்தான் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.