திமுக கூட்டணி முழுமை பெற்றுவிட்ட நிலையில், அந்தக் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஏன் தாமதமாகி வருகிறது என்பது பற்றிய புதிய தகவல்கள் கசிந்துள்ளன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ, மமக, இ.யூ.முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டு, ஒரு மாதம் ஆக உள்ளது. ஆனால், கூட்டணி கட்சிகளுடன் இதுவரை திமுக சார்பில் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகக் கூறப்பட்டு வருகிறது. அதிகாரபூர்வமாக எந்தப் பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை. 

நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டிவரும் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு புதுச்சேரி சேர்த்து 15 தொகுதிகளை ஒதுக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதே நேரத்தில் திமுகவோடு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி கட்சிகள் இணைந்து செயல்பட்டுவரும் நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி தேர்தல் பணிகளை ஏன் திமுக துரிதப்படுத்தவில்லை என்ற கேள்வி கேள்வியும் இயல்பாக எழுகிறது. ஆனால், அதற்கு என்ன காரணம் என்ன என்ற தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.

 

அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிய பிறகே திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்து புதிய கட்சிகள் வருகைக்கு கதவை மூடிய பிறகு தொகுதி பங்கீட்டை அறிவிக்கலாம் என்று ஸ்டாலின் மருமகன் சபரீசன் கொடுத்த ஐடியாவால்தான் இந்தத் தாமதம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதன்படி அதிமுக தொகுதி பங்கீடு முடிந்த பிறகு திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கும்போது, அந்த கட்சிகள் அதிமுகவுக்கு செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தும் உத்தி இது என்கின்றன திமுக வட்டாரங்கள். அமமுகக்கு சென்றாலும் பராவாயில்லை, அதிமுகவுடன் செல்லக் கூடாது என்பதற்காக போடப்பட்ட திட்டம் இது என்கிறார்கள். குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்களுடன் தொடர்பில் உள்ளன என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்த பிறகுதான் இந்த முடிவை திமுக எடுத்ததாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

கடந்த காலங்களில் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டு திமுக கூட்டணியிலிருந்து கட்சிகள் விலகிய சம்பவங்களும் நடந்துள்ளன. குறிப்பாக மதிமுக இரண்டு முறை கூட்டணியிலிருந்து விலகியிருக்கிறது. 2001-ம் ஆண்டில் தனித்து போட்டியிட்ட மதிமுக, 2006-ம் ஆண்டில் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறியால் அதிமுக கூட்டணிக்கு கடைசி கட்டத்தில் தாவியது. இதுபோன்ற கடந்த கால கசப்பான சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும், திமுக கூட்டணி கட்சிகளை வேறு எங்கும் செல்லவிடாமல் செய்யவும், குறைந்த தொகுதிகளை ஒதுக்கி அதிக தொகுதிகளில் போட்டியிடவும் திமுக  முடிவு எடுத்ததால்தான், தொகுதி பங்கீடு தாமதமாகிவருவதாக  அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.