திமுக-காங்கிரஸ் இடையேயான மக்களவை தேர்தல் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல் தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையை தேசிய, மாநில கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது வரை அதிமுக- பாமக, பாஜக இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7, பாஜகவிற்கு 5 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் மக்களவை தேர்தலில் யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் ராகுல் வீட்டில் ஆலோசனை நடைபெற்து. இந்த ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, ப.சிதம்பரம், தங்கபாலு, இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். திமுக கூட்டணியில் 10 தொகுதிகளை கேட்க வேண்டும் என நிர்வாகிகள் ராகுலிடம் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை சென்னையில் அறிவிக்கப்படும் என்றார். அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்தது வருத்தம் அளிக்கிறது. வரலாற்று பிழையை பாமக செய்துவிட்டது. அதிமுக மீது ஊழல் புகார்களை அளித்த பாமக அதற்கெல்லாம் இப்போது என்ன சொல்ல போகிறது. மேலும் பாமக ஒரே நேரத்தில் திமுகவுடனும், அதிமுகவுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது எனத் தெரிவித்தார்.