திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியின் பெயர் வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் இருப்பதால் வேட்புமனுவை நிராகரிக்க தேவையில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் வரும் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதேபோல் சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் மே 19-ம் தேதி தான் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த 4 தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன. அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரியிடம் அமமுக மற்றும் திமுகவினர் புகார் அளித்தனர். அந்த புகாரில் திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் முனியாண்டி, இரட்டை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதை மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளரை பல கட்ட இழுபறிக்கு பிறகே அதிமுக தலைமை தேர்வு செய்திருந்தது. இப்போது அவர் மீது புகார் அளித்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் வாக்காளர் பட்டியல் 2 இடங்களில் பெயர் இருந்தாலும் முனியாண்டியின்  வேட்புமனுவை நிராகரிக்க தேவையில்லை என்று திமுகவின் புகாருக்கு திருப்பரங்குன்றம் தேர்தல் அதிகாரி பஞ்சவர்ணம் பதிலளித்துள்ளார்.