கந்தபுராண பாடல் வரிகளை மாற்றி, தேர்தல் பிரசாரத்துக்காக பாடல் வெளியிட்டுள்ள தி.மு.க.,வுக்கு, காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கந்தபுராணத்தில், ‘வான்முகில் வாழாது பெய்க, மலிவளம் சுரக்க, மன்னன் கோன்முறை அரசு செய்க, குறைவிலாது உயிர்கள் வாழ்க, நான்மறை அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க, மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்’என்ற மங்கல வாழ்த்து பாடல் இடம் பெற்றுள்ளது. இதில், ‘மன்னன் கோன்முறை அரசு’ என்பதை, ‘மைந்தன் கோன்முறை அரசு’ என்றும், ‘நான்மறை அறங்கள் ஓங்க’ என்பதை, ‘ஐம்பெரும் அறங்கள் ஓங்க’ என்றும், ‘நற்றவம் வேள்வி மல்க’ என்பதை ‘நன்னெறி தொழில்கள் மல்க’ என்றும், ‘மேன்மைகொள் சைவ நீதி’ என்பதை, ‘மேன்மைகொள் சமூக நீதி’ என்றும் பாடல் வரிகளை மாற்றி, தி.மு.க., தேர்தல் பிரசாரத்துக்காக, வீடியோ பாடலை வெளியிட்டுள்ளது. 

இது குறித்து, காமாட்சி புரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறியதாவது:” ‘வான்முகில் வாழாது பெய்க’ என துவங்கும் கந்தபுராண பாடல், உலகம் சிறப்புற இறைவனிடம் வேண்டும் பாடல். வழிபாட்டுப் பாடலை, கொச்சைப்படுத்தும் விதமாக, அரசியல் கட்சி வெளியிட்டுள்ள பாடல் வரிகள் அமைத்துள்ளன. அரசியல் கட்சிகள், தங்கள் கொள்கை, கோட்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் செயல்களை கைவிட வேண்டும். மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என அவர் கூறினார். சமீபத்தில், கந்தசஷ்டியை இழிவுபடுத்தி வெளியான கருத்துக்கு, தமிழகம் முழுதும் கடும் கண்டனம் எழுந்தது. அது ஓய்வதற்குள் தி.மு.க.,வினர் கந்தபுராணத்தை, ‘காப்பி அடித்து’ வீடியோ பாடல் வெளியிட்டது, சமூக வலைதளங்களில், கண்டனத்துக்கு ஆளாகி வருகிறது. இந்த விஷயத்தை பா.ஜ.க. கையிலெடுத்து பெரும் பிரச்னை செய்யும் என்று தெரியவந்துள்ளது.