திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வலது தொடையில் இருந்த நீர்கட்டி அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.  மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மருத்துவர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து நேற்று இரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்றார்.

 

இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, மதிமுக பொது செயலாளர் வைகோ, திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட பலர் சந்தித்தனர். மருத்துவமனையில் அவருக்கு வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் வலது கால் தொடையில் இருந்த நீர்கட்டி அகற்றப்பட்டதாக அப்போலோ நிர்வாகம் செய்தி வெளியிட்டிருந்தது. விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், அப்போலோ மருத்துவமனையில் இருந்து மு.க.ஸ்டாலின், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பியுள்ளார்.