கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருந்தன. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகளையும் ஜெயலலிதா ஒதுக்கினார்.அந்த தேர்தலில் இதில் மார்க்சிஸ்ட் 10 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் 9 இடங்களிலும் வென்றன. இதன் பிறகு 2014 நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஜெயலலிதா கூட்டணியில் இருந்து விரட்டி அடித்து 40லும் வென்றார். இதனால் தனித்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தன.

இதன் பிறகு 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி என்று ஆரம்பித்து இடதுசாரிக் கட்சிகள் படுகுழியில் விழுந்தன. இருந்தாலும் பிறகு திமுக கூட்டணியில் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் தலா 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றன. அப்போது இடதுசாரிகளுக்கு 4 தொகுதிகளை திமுக கொடுத்ததே சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் குறைவான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான் என்று பேச்சு எழுந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் தற்போது இடதுசாரிக்கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக சொல்கிறார்கள்.

எதுவும் அதிகாரப்புர்வமாக உறுதியாகவில்லை என்றாலும் கூட கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சட்டப்பேரவை தேர்தலில் எத்தனை தொகுதிகளை ஒதுக்க முடியும் என்று திமுக தரப்பில் இருந்து ஏற்கனவே தகவல்கள் பாஸ் செய்யப்பட்டுவிட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அண்ணா அறிவாலயத்தில் இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போதே, வரும் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் சாதகமான அணுகுமுறையை கடைபிடிக்குமாறு ஸ்டாலின், இடதுசாரித் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டதாக கூறுகிறார்கள். இதன் பிறகே இடதுசாரித் தலைவர்களை தொடர்பு கொண்ட திமுக நிர்வாகிகள் தலா 6 தொகுதி என்று பேச்சை ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள்.

ஆனால் இடதுசாரிகள் தரப்போ திமுகவிடம் தங்களுக்கு தலா 12 தொகுதிகள் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும் பல கட்ட பேச்சு நடைபெற்றும் தலா 6 தொகுதிகள் என்பதில் இருந்து திமுக மேலே வரவில்லை என்று சொல்கிறார்கள். இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் என்ன கூறினாலும் கடைசியாக ஆறு தொகுதிகள் தான் என்று திமுக நிர்வாகிகள் வந்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் இடதுசாரிக்கட்சிகளுக்கு இந்த முறை வேறு எங்கும் போக்கிடம் இல்லை என்பதை திமுக உணர்ந்து வைத்திருப்பது தான் என்கிறார்கள். நிச்சயமாக அதிமுக கூட்டணிக்கு செல்ல முடியாது.

பாஜக இருப்பதால் இடதுசாரிகள் அதிமுகவுடன் கூட்டு வைக்க முடியாது. 3வது அணி என்றால் எந்த தொகுதியிலும் டெபாசிட் கூட கிடைக்காது. இதனால் இடதுசாரிகளுக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை என்பதாலும் இடதுசாரிகள் கூட்டணியில் இல்லை என்றால் தொகுதிகள் மிச்சம் என்று திமுக நினைப்பதாலும் தொகுதிப்பங்கீடு பேச்சு அப்படியே முட்டுக்கட்டை போடப்பட்டது போல் நிற்பதாக அறிவாலய வட்டாரத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.

•••••••