நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரை மற்றும் நாகராஜன் வீடுகள் மற்றும் அருப்புக்கோட்டையில் உள்ள அவரது “எஸ்.பி.கே” கட்டுமான நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை "ரெய்டு"   நடைபெறுகிறது. ஆபரேஷன் பார்க்கிங் என்ற பெயரில் இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது. சென்னையில் பல இடங்களில் பார்க் செய்யப்பட்டுள்ள கார்களில் மூட்டை மூட்டையாக பணம் பதுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, லஞ்ச ஒழிப்பு துறையிடம் கடந்த 13 ஆம் தேதி  புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் ரூ.713 கோடிக்கு பதிலாக ரூ.1515 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது உறவினர்கள் மற்றும்  நெருக்கமானவர்கள் ஆதாயம் பெற்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் திருநெல்வேலி  -செங்கோட்டை-கொல்லம் சாலை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உறவினர்களுக்கு மட்டுமே டெண்டர் தரப்பட்டது என்றெல்லாம் புகார் கூறப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக தரப்பில்  குற்றம்சாட்டியுள்ளது.

இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை ஊழல் பற்றி விசாரிக்க திமுக சார்பில்  உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்   ஆர்.எஸ்.பாரதி.இந்த வழக்கு, நாளை அல்லது நாளை மறுதினம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.