முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதையடுத்து திருச்சியில் உள்ள காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார். அப்போது ஏராளமான அதிமுக தொண்டர்கள் கூடியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது திமுகவினர் கள்ள ஓட்ட போடுவதாக வந்த தகவலையடையடுத்து வாக்குச்சாவடிக்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக நிர்வாகி நரேஷ் என்பவரை அரைநிர்வாணம் படுத்தி தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பட்டினம்பாக்கம் வீட்டில் இருந்த ஜெயக்குமாரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அடுத்தடுத்து இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் சிறையில் இருந்து வெளியே வர முடியாமல் கஷ்டப்பட்டார். இதனையடுத்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. 19 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயக்குமாருக்கு தொண்டர்கள் சிறைவாசலில் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெயக்குமார் வீட்டிற்கே சென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது சிறையில் தனக்கு நேர்ந்த சித்ரவதைகளை அவர்களிடம் விவரித்தார்.

காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட ஜெயக்குமார்

இந்தநிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுபடி திருச்சி சென்ற ஜெயக்குமார் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இன்று காலை திருச்சி கண்டோமெண்ட் காவல் நிலையத்திற்கு சென்ற ஜெயகுமாருக்கு அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து காவல்நிலையத்தில் இருந்த நோட்டில் தனது புகைப்படம் ஒட்டியதற்கு அருகில் தனது கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், திமுக அரசு மக்கள் நல திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு பழிவாங்கப்படுவதாக குற்றம்சாட்டினார். ஒவ்வொரு வீழ்ச்சிக்கு பிறகு தான் அதிமுக எழுச்சி பெற்றது என்பது வரலாறு என தெரிவித்தவர், சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தாலும் நாடாளுமன்றம் மற்றும் அடுத்துவரவுள்ள சட்டமன்ற தேர்தலில் மிகப் பெரிய வெறியை அதிமுக பெறும் என கூறினார்.

அதிமுகவை அழிக்க முடியாது

கருணாநிதியே எதிர்த்த அதிமுகவை ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்தார். அதிமுகவை அழித்து விடலாம் என நினைப்பது பூனை பகல் கனவு கண்டது போல் தான் இருக்கும் என கூறினார். ஸ்டாலின் செயல்பாடு பார்க்கும் பொழுது சிரிப்பு தான் வருவதாக கூறி சிரிப்பு வருது, சிரிப்பு வருது என்ற பாடலை பாடி கிண்டலடித்தார். இரட்டை தலைமை சிறப்பாக செயல்படுவதாக கூறிய ஜெயக்குமார் கட்சி கட்டுப்பாட்டை யார் மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு ஜெயக்குமார் ஏம்பா நான் இங்க தான் இருக்க போறேன்.. மீண்டும் புதன்கிழமை, வெள்ளிக்கிழமைக்கு வரப்பொறேன் அப்போ பார்த்துகலாம்...ரீப்பீட்டு என்று கூறிவிட்டு காவல்நிலையத்தை விட்டு சென்றார்.