அனைத்து சாதியினரையும் தொடர்ந்து இழிவாக பேசி வரும் திமுகவுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் கா.பாண்டியராஜன் கூறியுள்ளார். திருவேற்காட்டில் அதிமுக செயல்வீரர்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கா பாண்டியராஜன் பங்கேற்று ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் மேடையில் பேசியதாவது: 

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர இளம்பெண்கள் பாசறையின் சிங்கங்கள் களப்பணி ஆற்ற வேண்டும். அதேபோல் முதல்வர் அறிவித்த 7.5% இட ஒதுக்கீடு மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவ கனவு நனவாகி உள்ளது. ஆனால் தொடர்ந்து திமுகவில் உள்ள அத்தனை தலைவர்களும் அனைத்து ஜாதியினரையும்,  மதத்தினரையும் இழிவாக பேசி வருகின்றனர். தொடர்ந்து சாதி மதங்களைக் இழிவாக பேசி வரும் ஒரே கட்சி திமுகதான். 

இதனை மக்கள் யாரும் மறக்கவில்லை, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இன்று தமிழகத்தில் மழை பெய்து வருகிறது அனைத்து ஏரி குளங்களும் தூர்வாரப்பட்ட காரணத்தால் மழைநீர் வீணாகாமல் சேகரிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் புதிய அறிவிப்புகளை அறிவித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் மனதில் இடம்பிடித்து வருகிறார். எடப்பாடியார் என்றால் மக்கள் ஓகே சூப்பர் சூப்பர் என்று எந்தப் பக்கம் பார்த்தாலும் முதலமைச்சருக்கு புகழ்மாலை சாற்றுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.