Asianet News TamilAsianet News Tamil

’கொங்குல இனி எவனுக்கும் பங்கு இல்ல’ - கோவையில் ‘செந்தில் பாலாஜியின்’ ஆட்டம் தொடங்கியது !

 

‘கொங்குல இனி எவனுக்கும் பங்கு இல்ல’ என்ற  போஸ்டரை கோவையில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Dmk cadres posters published in coimbatore areas
Author
Coimbatore, First Published Nov 17, 2021, 4:08 PM IST

 

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று ஆட்சியில் அமர்ந்ததும், கொரோனா சிகிச்சைகள் மற்றும் அரசு திட்டங்களில் கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது அமைச்சர் சக்ரபாணியை நியமித்து கொரோனா கால நடவடிக்கைகளை மேற்கொண்டது திமுக. இதற்கு முன்னதாக சேலம் முதல் கோவை வரையிலான கொங்கு பகுதி மாவட்டங்களில் 2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் வென்றிருந்த போதும்,  2021 சட்டமன்ற தேர்தலில் ஒருசில தொகுதிகளை தவிர்த்து அதிக இடங்களை அதிமுகவே கைப்பற்றியது.

Dmk cadres posters published in coimbatore areas

இதைத் தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் திமுகவை வளர்ச்சி பெற செய்யவும், அங்கு தமிழ்நாடு அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கவும் யாரை நியமிப்பது என்று திமுக தீவிர ஆலோசனை மேற்கொண்டது. மக்களின் குறைகளை தீர்க்கவும், வரும் நகர உள்ளாச்சி தேர்தலை மனத்திற்கொண்டு மின்சாரம் மற்றும் அயத்தீர்வை அமைச்சரும் கரூர் சட்ட மன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜியை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். ஏற்கனவே அதிமுகவில் மாவட்ட செயலாளர்,அமைச்சர் என்று முக்கிய பதவிகள் வகித்ததாலும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் குட்புக்கில் இருப்பதாலும் செந்தில் பாலாஜி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள். 

Dmk cadres posters published in coimbatore areas

கடந்த சில நாட்களாக கோவையில் முகாமிட்டு கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அவர் குறைதீர்ப்பு முகாம்களை நடத்தி பொதுமக்களிடம் மனுக்களையும் பெற்றுவருகிறார் செந்தில் பாலாஜி. கோவையில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சியினர் போஸ்டர் ஒட்டுவது அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்களை வரவேற்பது, அரசின் திட்டங்களை வரவேற்பது, எதிர்கட்சியினர் சார்பில் ஒட்டப்படும் நன்றி அறிவிப்பு போஸ்டர்கள், நலத்திட்ட உதவி போஸ்டர்கள் ஆகியவை அதிகளவில் ஒட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக நகரில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான இரயில் நிலையம், பேருந்து நிலையம், மேம்பாலங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. கோவை அவினாசி சாலை மேம்பாலம், வடகோவை மேம்பாலம், இரயில் நிலையம்,காந்திபுரம் புதிய மேம்பாலம் பகுதிகளில் மேம்பாலத்தின் தூண்களில் அதிகளவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றது.

Dmk cadres posters published in coimbatore areas

இதனிடையே திமுக சார்பில் புதிதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பேசுபொருளாக மாறியுள்ளது. 'கொங்குல இனி எவனுக்கும் பங்கில்ல' என்ற வாசகங்களுடன், முதலமைச்சர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட பொறுப்பாளர்கள் ந. கார்த்திக், பையா கவுண்டர் ஆகியோரின் புகைப்படங்கள் அதில் இடம்பெற்றுள்ளது.  தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் உருமாற்ற தடைச்சட்டம் 1959ன் படி அரசு அலுவலகங்கள், மேம்பாலங்கள், அரசுப்பேருந்துகள் ஆகியவற்றில் போஸ்டர்கள் ஒட்டவும், விளம்பரங்கள் செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஆளும் கட்சியினரே அதனை மீறும் வகையில் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது வேலுமணிக்கு எதிராக செந்தில் பாலாஜியின் ஆட்டம் தொடங்கியதைக் காட்டுகிறது என்கின்றனர். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios