ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், திமுகவினர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.  அழகு நிலையத்துக்குள் புகுந்து பெண்களை அடித்து நொறுக்குவது, பரோட்டா  கடையில் வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு காசு கேட்டால் கடையை அடித்து நொறுக்குவது என  திமுகவினர் கடும் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர் ஒரு எதிர்கட்சியாக இருக்கும்போதே இவ்வளவு அராஜகம் பண்ணுகிறார்கள் என்றால், இவர்கள் எல்லாம் ஆளும் கட்சியாக வந்துவிட்டால் அடேங்கப்பா..அராஜகம் தாங்க முடியாது என தெரிவித்தார்.

மத்திய சென்னை தொகுதியில் பாமக வேட்பாளர் சாம் பாலை ஆதரித்துப் பேசிய , எடப்பாடி, இங்குள்ள திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தேர்தல் வந்தால்தான் தொகுதிக்கு வருவார் என கிண்டல் செய்தார்.

தயாநிதி மாறனுக்கு 40 தொலைக்காட்சி நிறுவனங்கள் உள்ளதாகவும், அவற்றை முழுமையாக கைக்குள் வைத்துக் கொண்டு கேபிள் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இவர்களுக்கெல்லாம் ஓட்டுப் போட்டால் நம் பிரச்சனையை தீர்த்து வைப்பார்களா ? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.