தமிழக உரிமையை பாதிக்கும் தென்பெண்ணையாற்றில் திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் அதிமுக தோல்வி கண்டுவிட்டதாக கூறி, அதிமுக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி தர்மபுரி திருவண்ணாமலை விழுப்புரம் கடலூர் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிட் முழு விவரம் பின்வருமாறு:-  தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள அணை உள்ளிட்ட 5 திட்ட பணிகளுக்கு தடை விதிப்பதற்கு எந்த காரணமும் சொல்லப்படவில்லை என்ற ரீதியில்,  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலும்.  எதிர்க்கட்சித் துணைத் தலைவரின் அறிக்கைக்குக்கூட பொதுப்பணித் துறைக்கு பொறுப்பு வகிக்கும் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்லாமல்,  சம்பந்தமில்லாத துறையின் அமைச்சர் திரு .ஜெயக்குமாரை  விட்டு சட்டத் தோல்விக்கும்,  வழக்கை அலட்சியமாக நடத்தியதற்கு,  அரைவேக்காட்டுத் தனமாக அறிக்கைவிட வைத்திருப்பது.  அதிமுக அரசு ஐந்து மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் விபரீத விளையாட்டை  நடத்துவதைதான் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது என்பது மேலும் நிரூபணமாகிறது. 

எனவே தமிழக உரிமையை பாதுகாக்கும் தென்பெண்ணையாறு திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் தோல்வி கண்டுள்ள அதிமுக அரசை கண்டித்து திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வருகின்ற (21-11-2019) வியாழக்கிழமை அன்று கிருஷ்ணகிரி,  தர்மபுரி,  திருவண்ணாமலை,  விழுப்புரம் , கடலூர்,  ஆகிய மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  அந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை,  ஒன்றிய,  பேரூராட்சி,  நகராட்சி,  மாவட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்படிக்கு அண்ணா அறிவாலயம் திமுக தலைமை கழகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.