சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ராஜீவ்காந்தி கொலை குற்றத்தில் குற்றவாளிகள் என்று சட்டரீதியாக நிரூபிக்கப்பட்டவர்களை யாரும் ஹீரோவாக்க வேண்டாம். ராஜீவ்காந்தியுடன் உயிரிழந்த மற்ற தமிழர்களைப் பற்றி யாருமே பேசுவது இல்லை. இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் சட்டரீதியாக விடுதலை பெற்றால் அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. போலீஸாரிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள்தான், சட்டத்தில் இருந்து தப்பிக்க பாஜகவில் தஞ்சமடைகிறார்கள்.


இதற்கு பாஜக விளக்கமளிக்க வேண்டும். கமல் கட்சியின் கொள்கை, சித்தாந்தம் அனைத்தும் மதச்சார்பின்மையைச் சார்ந்திருக்கிறது. எனவே அவர் திமுக , காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன். தேர்தலில் கமல் தனித்து நின்றால் சொற்ப வாக்குகள்தான் பெறுவார். அவர் தொடர்ந்து அரசியலில் நீடிக்க வேண்டும் என்றால் சாதுர்யமான முடிவை எடுக்க வேண்டும். மற்ற கட்சிகள் மீதுள்ள கோபத்தின் காராணமாகத்தான் மக்கள் நோட்டாவுக்கு பதில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். மக்களவை தேர்தலைப் போல், சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்" என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரமும் காங்கிரஸ் கூட்டணிக்கு கமல் வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கமல் காங்கிரஸ் கூட்டணிக்குள் வர வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயலாற்றி வருகிறது.