கலைஞர் மறைவை தொடர்ந்து தனது அரசியல் நடவடிக்கைகளில் பல்வேறு மாற்றங்களை ஸ்டாலின் செய்து வருகிறார். அதில் முக்கியமான மாற்றம், நண்பர்களை உருவாக்கவில்லை என்றாலும் எதிரிகளை உருவாக்க கூடாது என்பது தான். ஏற்கனவே பாஜகவிற்கு எதிரான கடும் நிலைப்பாட்டால் ஸ்டாலின் விமர்சனத்திற்கு ஆளாகியிருந்தார். தமிழகத்தில் பாஜகவிற்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லாத நிலையில் யாரை திருப்தி படுத்த அவர்களை ஸ்டாலின் கடுமையாக விமர்சிக்கிறார் என்கிற கேள்வி எழுந்தது.
   
மேலும் தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்த போது கருப்புக் கொடி காட்ட முயன்றது, கோ பேக் மோடி என்று ட்விட்டரில் ஹேஸ்டேக்கை டிரென்டாக்கியது என்று பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் ஸ்டாலின் மிகவும் தீவிரம் காட்டினார். கடந்த முறை அமித்ஷா சென்னை வந்த போது கூட திமுகவினர் கோ பேக் அமித்ஷா என்கிற ஹேஸ்டேக்கை டிரென்டாக்கினர். ஆனால் கலைஞர் மறைவை தொடர்ந்து ஸ்டாலின் அரசியல் நடவடிக்கைகளில் புதிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.


   
கலைஞர் மறைவுக்கு நடிகர் சங்கம் ஏற்பாடு செய்த இரங்கல் கூட்டத்தில் ரஜினியுடன் ஸ்டாலின் கலந்து கொண்டது வரவேற்பை பெற்றது. மேலும் வாஜ்பாய் உடலுக்கு டெல்லி சென்று மரியாதை செலுத்தியதுடன் வாஜ்பாய் அஸ்திக்கு மரியாதை செலுத்த பாஜகவின் தலைமை அலுவலகத்திற்கே ஸ்டாலின் சென்றது தமிழக அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியது.
   
பாஜக அலுவலகத்திற்கு ஸ்டாலின் சென்றதோடு மட்டும் அல்லாமல் அங்கு தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரோடு தனியறையில் ஆலோசனையும் நடத்தியிருந்தார். இதனை தொடர்ந்து சென்னையில் வரும் 30ந் தேதி தி.மு.க நடத்த உள்ள கலைஞர் இரங்கல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பது உறுதியானது. முதலில் பாஜகவின் தலைவர் என்கிற முறையில் சம்பிரதாயமாகவே அமித் ஷாவிற்கு அழைப்பு அனுப்பியது திமுக.
   
ஆனால் தி.மு.கவின் அழைப்பை ஏற்று அமித்ஷா வர ஒப்புக் கொண்டது ஸ்டாலினுக்கே இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவர் சென்னை வந்து தனது தந்தையான மறைந்த கலைஞருக்கு இரங்கல் தெரிவிப்பது என்பத அகில இந்திய அளவில் கவனம் பெறும் என்பது ஸ்டாலினுக்கு நன்கு தெரியும். இதனால் அமித்ஷாவை உடனடியாக ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக சொல்லப்படுகிறது. 


   
அப்போது கலைஞர் இரங்கல் கூட்டத்திற்கு வருகை தருவதற்கு அமித்ஷாவிற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.  இதனை கேட்ட அமித்ஷா கலைஞருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த விரும்பியதாகவும், ஆனால் அன்றைய தினம் வர முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் ஸ்டாலினிடம் கூறியதாக தெரிகிறது. மேலும் கலைஞர் போன்ற ஒரு முதுபெரும் தலைவருக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்பது தனக்கு பெருமையான விஷயம் என்றும் அமித்ஷா  ஸ்டாலினிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது.


   
இதுநாள் வரை தமிழகத்தில் எலியும் பூனையுமாக இருந்த பாஜக – திமுக நெருக்கமாகி வருவது அரசியல் அரங்கிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அமித்ஷா சென்னையில் நடைபெறும் கலைஞர் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்பதை அறிந்து தான் மகிழ்ச்சி அடைவதாக பா.ஜ.க தலைவர் சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
   
இதனால் அமித்ஷா சென்னை வருவாரா? மாட்டாரா? என்கிற குழப்பம் ஏற்பட்டது. ஆனால் அமித்ஷா நிச்சயம் சென்னை வருவார் என்று தமிழக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.