திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் எல்லாம் உள்ளன என்பது பற்றி தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.

புதுக்கேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், “ திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக உள்பட 10 கட்சிகள் தொடர்ந்து கூட்டணியாகவே செயல்பட்டு வருகிறோம். தேர்தல் அறிவிப்பு வந்ததும் தொகுதிகளை ஒதுக்கிக்கொண்டு களத்துக்கு செல்வோம். அதற்காக தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.” என்று தெரிவித்திருந்தார். இதன்மூலம் திமுக - காங்கிரஸ் கூட்டணி இதுதான் என்பதை திருநாவுக்கரசர் தெளிப்படுத்தியிருக்கிறார். 

இதேபோல திமுக கூட்டணியில் பாமக இல்லை என்பதையும் திருநாவுக்கரசர் தெளிவுப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. திமுக கூட்டணியில் இணைய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் பாமக நிறுவனர் ராமதாஸின் சம்பந்தியுமான கிருஷ்ணசாமி மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் திருநாவுக்கரசரின் பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றால், காங்கிரஸுக்கு தேவையான கூடுதல் இடங்களை கேட்டுப் பெற முடியாது என்ற எண்ணம் காங்கிரஸார் மத்தியில் ஏற்கனவே இருந்தது. 

இந்நிலையில் திருநாவுக்கரசரின் பேட்டி பாமக கூட்டணி பற்றிய ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக தெரிகிறது. இதேபோல கடந்த சில மாதங்களாகவே திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக, விசிக இடம் பெறுவது பற்றி சலசலப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேட்டியளித்த திமுக பொருளாளர் துரைமுருகன், “திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ், இ.யூ.முஸ்லீம் லீக் என பழைய கஸ்டர்கள்தான் உள்ளனர்” என்று தெரிவித்த கருத்து சலசலப்புக்கு பிள்ளையார்சுழி போட்டது. 

கடந்த சில தினங்களுக்கு முன்புகூட மீண்டும் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த துரைமுருகன், “தாலி கட்டினால்தான் பொண்டாட்டி என்பது போல ஒப்பந்தம் போட்டால்தான் கூட்டணி.” என்ற அளித்த பேட்டியும் மதிமுக, விசிகவை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியது. தொடர்ந்து திமுக கூட்டணியில் பாமக என்று வந்த தகவல்களால் விசிக கொதித்துபோய் இருந்தது. இந்நிலையில் திருநாவுக்கரசரின் பேட்டி திமுக-காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் குறித்த தெளிவான பார்வைக்கு வித்திட்டுள்ளது.