திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? என்பதற்கு முக.ஸ்டாலின் சூசகமாக பதிலளித்துள்ளார்.  விஜயகாந்தை, ரஜினிகாந்த் சந்தித்து பேசிய சில மணி நேரங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்தித்துப் பேசினார். 


மக்களவை தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது தேமுதிக. தொகுதி உடன்பாடு ஏற்படாததால், திமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணையுமாறு விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் விஜயகாந்தை சந்திக்க ரஜினிகாந்த் சென்றார்.

 

பாஜக கூட்டணியில் விஜயகாந்தை இணைய வலியுறுத்தவே அக்கட்சியின் தலைவர்கள் ரஜினிகாந்தை அனுப்பியதாக தகவல்கள் பறந்தன. அதனையடுத்து விஜயகாந்தை அவரது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’நான் அவரோடு நீண்ட நாட்களாக நண்பராக பழகிக்கொண்டிருப்பார். அவரை விட வயதில் நான் குறிவாக இருந்தாலும் என்னை அண்ணன்ர் என்று தான் அழைப்பார். கருணாநிதி மீது அன்பும், பண்பும், பக்தியும் வைத்திருந்தார்.

கருணாநிதி மறைந்த சேதி கேட்டு அவர் அழுது வெளியிட்ட வீடியோ மனதை உருக்கியது. அடுத்து சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் இருந்து நேரடியாக மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்துக்கு சென்று அழுதது மனதில் நிற்கிறது. அப்படிப்பட்ட விஜயகாந்த், சிகிச்சை பெற்று ஆரோக்கியமாக திரும்பியுள்ளார். அவர் பல்லாண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்து நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் பாடுபடவேண்டும் என திமுக சார்பில் வாழ்த்துகிறேன்.

 

இந்த சந்திப்பு நலம் விசாரிக்க மட்டுமே தவிர அரசியல் பேசவில்லை’’ எனத் தெரிவித்த அவரிடம், தேமுதிக, திமுக கூட்டணியில் இணையுமா? என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ’’உங்கள் எண்ணம் நிறைவேறினால் மகிழ்ச்சி’’ என சூசகமாகத் தெரிவித்தார்.