நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் பாமக இடம்பெறும் என்ற அரசியல் அரங்கில் பேசப்பட்டுவரும் நிலையில், திமுக கூட்டணியில் பாமக இடம் பெறாது என்று சூசகமாகத் தெரிவித்திருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். 

தி.மு.க.தலைவர் மு.க. ஸ்டாலினை திருமாவளவன் அண்ணா அறிவாலயத்தில் நேற்று இரவு சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்புக்கு பிறகு திருமாவளவன் செய்தியாளர்களிம் பேசினார். அப்போது அவர் கூறியது:- திருச்சியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் பங்கேற்றதற்காக மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன். 

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறும் என்பது வெறும் ஊகம்தான். பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி அமையுமா அமையாதா என்பது  மெளன யுத்தமாக உள்ளது. அதிமுக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் பா.ஜ.க. மீதுள்ள எல்லா வெறுப்பும் அ.தி.மு.க. மீது திரும்பும் என்ற அச்சம் அ.தி.மு.க. தலைவர்களிடம் உள்ளது. 

பா.ஜ.க.வுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் மீது அக்கறை இல்லை. இப்போது திடீரென மீனவ மக்களை திருப்திபடுத்தும் வகையில் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.  நாடாளுமன்ற தேர்தலுக்காகப் போலியான வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை பட்ஜெட்டாக பாஜக கொடுத்துள்ளது. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.