தமிழக அரசின் கொரோனா பேரிடர் கால மோசடிகள் மற்றும் தோல்விகள் குறித்து விவாதிக்க திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, மதிமுக பொதுச்செயலர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன். ஐ.ஜே.கே தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், அண்மைக்காலமாக செய்தி தொலைகாட்சி விவாதங்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் நிகழ்ந்த விஷயம் பற்றிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதில், ‘திராவிட இயக்கம், பொதுவுடமை இயக்கம் மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகளால் சிந்தாந்த ரீதியாகவும் செயல்பாட்டு முறைகளாலும் யாரும் உட்புக இயலாத வண்ணம் நன்கு பண்படுத்தபட்டிருக்கும் தமிழகம், பாஜகவின் கண்ணை உறுத்துகிறது என்ற அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அதனால் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே ஊடக வெளிச்சத்தில் குளிர் காய நினைக்கிறார்கள். அதற்கு வசதியாக நமப்து பாரம்பரிய பன்முகத்தன்மைக்கு முற்றிலும் எதிரான ‘ஒரே சித்தாந்தம்’ என்பதில் ஈடுபாடு கொண்டுள்ள குறிப்பிட்ட ஒரு சிலரை அதிகாரப்படுத்தி அமர வைத்திட ஆங்காங்கே ஆசனம் தேடும் பிரயத்தனத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
அப்படி இடம் பிடித்து கொடுத்துவிட்டால், அனைத்தும் ஒரே குரலில் பாஜகவை உயர்த்திக் கோஷம் போடுவார்கள். அந்தப் பொய் முழக்கத்தில் எப்படியாவது கோட்டைக்குள் நுழைந்துவிடலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்துரிமையைத் தொடர்ந்து நசுக்கிவரும் மத்திய ஆளுங்கட்சியான பாஜகவினர், தமிழக ஊடகச் சுதந்திரத்துக்கு ஊறுவிளைவிக்கும் நோக்கில் செயல்படத் தொடங்கியிருப்பது ஜனநாயக விரோதச் செயல். இதற்கு இங்குள்ள அதிமுக அரசும் துணை போகிறது.

 
பாஜக - அதிமுகவின் கட்டளைகளுக்குப் பணிந்து நடு நிலையைக் காவு கொடுக்கும் ஊடகங்கள், காலப்போக்கில் மறைந்துவிடும். பாஜக-அதிமுகவின் அழுத்தம், அச்சுறுத்தல். ஆசை காட்டுதல் ஆகியவற்றுக்கு பயந்து, பணிந்து, ஜனநாயக நெறிகளையும் கருத்து சுதந்திரத்தையும் நடுநிலையையும் ஊடகங்கள் இரண்டாம்பட்சமாக கருதி, பின்னிடத்துக்குத் தள்ளும் கடினமான முடிவை மேற்கொள்ளுமானால், திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் அனைத்தும் அத்தகைய ஊடகங்களின் நிகழ்வுகளில் பங்கேற்மால புறக்கணித்திட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.’ என்று தீர்மானம் நிறைவேற்றிய திமுக கூட்டணி கட்சிகள், இதற்காக குழு ஒன்றையும் அமைத்துள்ளன.