கந்த சஷ்டி கவசம் பற்றி கொச்சையாகப் பேசிய கறுப்பர் கூட்டம் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சியான கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.
‘கந்த சஷ்டி’ குறித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வெளியான வீடியோ, பாஜகவினரையும் இந்து அமைப்புகளையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த சேனலை முடக்க வேண்டும் என்றும் கந்த சஷ்டி கவசத்தை அவதூறு செய்த சுரேந்திரன் என்பவரை கைது செய்ய வேண்டும் என்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரிவருகின்றன. இதுதொடர்பாக சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் கறுப்பர் கூட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீடுகள் தோறும் கந்த சஷ்டி பாடி போராட்டத்தில் நாளை ஈடுபட வேண்டும் என்று பாஜக அழைப்புவிடுத்துள்ளது. இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி குறித்து கொச்சையாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சியான கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.

 

 

இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள பதிவில், “கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் உள்ள யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் பாடல் குறித்து மிகவும் கொச்சையாக பேசி காணொளி வெளியிட்ட நபர் மீது தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கருத்துரிமை என்ற பெயரில் கந்தசஷ்டி கவச பாடலை கொச்சைப்படுத்தி இருப்பது தமிழகத்தில் மத கலவரங்களை உண்டாக்க முயற்சிப்பதன் ஆரம்ப புள்ளி. தமிழக அரசின் உடனடி நடவடிக்கை தேவை.” என்று தெரிவித்துள்ளார்.