Asianet News TamilAsianet News Tamil

கூட்டணி டிராமாவிற்கு குடுகுடுன்னு ஓடிவரும் திருமா வைகோ! முரசொலியில் முதல் பக்கத்தில் போட சொன்ன ஸ்டாலின்...

ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நேற்று அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இன்று வைகோ சென்னை திரும்பும் நிலையில் அவர் திமுக தலைவர் ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

DMK Alliance Issues with VCK and MDMK
Author
Chennai, First Published Nov 28, 2018, 9:31 AM IST

திமுக பொருளாளர் துரைமுருகனின் பேட்டியால் திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்பை தீர்க்கும் முயற்சியில் இறங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினமே வைகோ, திருமாவளவன் இருவரிடையேயும் செல்போனில் பேசியுள்ளார். இதையடுத்து நேற்று துரைமுருகன் இல்லாத சமயம் பார்த்து அறிவாலயம் சென்று ஸ்டாலினைச் சந்தித்தார் திருமாவளவன். இந்த நிலையில் அநேகமாக இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஸ்டாலினைச் சந்திக்கிறார் என சொல்லப்படுகிறது.

“காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய பழைய கஸ்டமர்கள்தான் இப்போது திமுக அணியில் இருக்கிறார்கள். மற்ற கட்சிகள் நண்பர்கள்தான், இன்னும் கூட்டணி முடிவாகவில்லை. சிலர் வரலாம், சிலர் செல்லலாம்” என்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தார் துரைமுருகன்.

சும்மாவே திமுக அணியை துவைத்துக் காயப்போடும் ஊடகங்களுக்கு இது அவல் ஆகிவிட்டது. திமுக கூட்டணியில் சிக்கல் என்று விவாதங்கள் நடத்த ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் துரைமுருகனின் பேட்டியால் மதிமுகவினர் மன வருத்தம் அடைந்திருப்பதாகவும், தன்மானமும், தன்மானத்தைவிட கட்சியின் நலனுமே முக்கியம் என்று வைகோ உருக்கமாகப் பேட்டியளித்தார். திருமாவளவன் செய்தியாளர்களிடம், ‘நாங்கள் நண்பர்கள்தான்’ என்று ஆதங்கமாகப் பதில் சொன்னார்.

ஸ்டாலின் சொல்லிதான் துரைமுருகன் பேசினாரா அல்லது அவராகவே பேசினாரா என்று திமுகவுக்குள்ளும், தோழமைக் கட்சிகளுக்குள்ளும் கேள்விகள் எழுந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திமுக தலைவர் ஸ்டாலின் செல்போனில் வைகோவுடனும், திருமாவளவனுடனும் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இருவரும் வெளியூரில் இருந்த நிலையில், “சென்னை வந்ததும் நேரில் வாங்க, பேசிக்கலாம்” என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.

மேலும், மதிமுகவும், திகவும் நடத்தும் ஏழு தமிழர் விடுதலை தொடர்பான ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்துக்கு திமுகவின் ஆதரவு உண்டு என்று அறிவிப்பு வெளியிட்டார் ஸ்டாலின். வழக்கமாக இதுபோன்ற அறிவிப்புகளைப் பத்திரிகை செய்தியோடு ஸ்டாலின் நிறுத்திக்கொள்வது வழக்கம். ஆனால் 26ஆம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு அந்த அறிவிப்பை மதிமுக தலைமையகமான தாயகத்தில் கொண்டு சேர்க்கும்படி திமுக நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார் ஸ்டாலின். அவ்வாறே ஸ்டாலின் அறிவிப்பு மதிமுக தலைமையகத்தில் நேரில் கொண்டு போய் சேர்க்கப்பட்டது. இந்தத் தகவல் வைகோவுக்குத் தெரிவிக்கப்பட்டதில் அவர் ஆறுதல் அடைந்தார். நேற்று வெளியான முரசொலியில் முதல் பக்கத்தில் இந்தச் செய்தி இடம்பெற்றதன் மூலம் மதிமுகவுக்கு ஸ்டாலின் கொடுக்கும் முக்கியத்துவம் தெரிகிறது என்று மதிமுகவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நேற்று அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இன்று வைகோ சென்னை திரும்பும் நிலையில் அவர் திமுக தலைவர் ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios