“ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ், திமுக கட்சிகள் அரசியலாக்க வேண்டாம். இது தமிழ் பண்பாட்டுக்கு உகந்தது அல்ல." என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த தேனீர் விருந்தை திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன.

தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரி

தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதது, தமிழக சட்டப்பேரவையை மதிக்கவில்லை என்று கூறி தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. அதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி. மமக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தேனீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. உச்சகட்டமாக ஆளும் திமுகவும் ஆளுநர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. விருந்தில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் மட்டுமே பங்கேற்றன. 

திமுக - காங்கிரஸ் கூட்டணி புறக்கணிப்பு

இந்நிலையில் தமிழகத்தை போல புதுச்சேரியிலும் சித்திரை முழு நிலவு தினமான இன்று தேநீர் விருந்துக்கு வரும்படி அரசியல் கட்சிகளுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தேனீர் விருந்தை புறக்கணிப்பதாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிவித்தார். காங்கிரஸை தொடர்ந்து திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்து அறிவித்தன. இதன்மூலம் தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும் ஆளுநர் அளித்த தேனீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன.

தமிழிசை ஆதங்கம்

இந்நிலையில் அரசியல் கட்சிகளின் புறக்கணிப்பு குறித்து ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். “ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ், திமுக கட்சிகள் அரசியலாக்க வேண்டாம். இது தமிழ் பண்பாட்டுக்கு உகந்தது அல்ல. அனைத்திலும் அரசியல் புகுத்தினால், யாரும் நல்லுறவுடன் இருக்க முடியாது” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.