Asianet News TamilAsianet News Tamil

அதிமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பு.. அந்த உஷ்ணத்தை சீக்கிரமா பார்க்கப்போறீங்க.. திமுக கூட்டணி கட்சி ஆவேசம்!

"85,000 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு இழப்பு வரும் என்று அறிவிக்கிற முதல்வர் ஆயிரக்கணக்கான கோடிகளுக்கான திட்ட ஒப்பந்தங்களை முடிவு செய்வதன் அவசியம் என்ன? சாலை திட்டங்களும் கட்டிட திட்டங்களும் நிதி இல்லாத நேரத்தில் செயல்படுத்த முயல்வது அவசியமா? அதற்கு தேவையான வருமானத்திற்காகதான் உயிரிழப்பு அதிகமாகும் என்று தெரிந்திருந்தும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதா?” 

Dmk allay slam ADMK Government
Author
Chennai, First Published Jun 27, 2020, 8:43 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று அறிவித்த முதல்வர் மாவட்டம் மாவட்டமாக தானே ஊரடங்கை மீறி பயணிப்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு உயிரிழப்புக்களை மெத்தனமாக எடுத்துக்கொள்வது வேதனையளிக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்ட ஆரம்பத்தில் ஒருவர் அல்லது இருவர் இறந்த போது தமிழக முதல்வரும் சில அமைச்சர்களும் தமிழகத்தில் உயிரிழப்பு குறைவுதானே என்று பேசி தாங்கள் திறமையாக செயல்படுகிறோம் என்று சொன்னார்கள். அரசின் கவனக்குறைவால் இப்போது ஒவ்வொரு நாளும் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இப்போதும் முதல்வர் தமிழகத்தில் உயிரிழப்பு குறைவு என்று பேசியிருப்பது தமிழக மக்களுக்கு வருத்தமளிக்கிறது.
ஒரு நாளைக்கு தமிழகத்தில் எவ்வளவு பேர் இறந்தால் இது அதிக உயிரிழப்பு என்று முதல்வர் ஏற்றுக் கொள்வார். தமிழக அரசு அதற்கு ஏதாவது இலக்கு வைத்திருக்கிறதா ? ஆரம்பத்தில் முதல்வர் தமிழ்நாட்டில் ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்று பேசினார். தினசரி 50 பேர் உயிரிழக்கும்போது இது குறைவு என்று மெத்தனமாக இருப்பது கொரோனா பரவலின் தீவிரத்தை அரசு புரிந்து கொள்ளாத நிலையையே காட்டுகிறது. ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் காவல்துறை 13 பேரை சுட்டு கொன்றபோதும் கூட தமிழக அரசினுடைய நிலைப்பாடு இப்படிதான் இருந்தது.


சாத்தான்குளத்தில் தந்தையையும், மகனையும் ஒரே நாளில் காவல்துறை அடித்து கொன்ற செய்தி அறிந்து தமிழகமே பற்றி எரிந்து கொண்டிருக்கும் போதும் கூட சர்வ சாதாரணமாக அப்பாவுக்கு நெஞ்சு வலி மகனுக்கு மூச்சு திணறல் என்று அறிக்கை விட்டு பொருளாதார உதவிகளை அறிவித்திருக்கிறார்கள். கோவை மாவட்டத்தில் சாமளாபுரத்தில் ஒரு காவல்துறை அதிகாரி நடுரோட்டில் போராடிய ஒரு பெண்ணை ஓங்கி கன்னத்தில் அறைந்த போதும் கூட எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அவருக்கு பதவி உயர்வை தமிழக அரசு கொடுத்தது. சாத்தான்குளத்தில் அடித்து இரண்டு உயிர்களை கொன்ற குற்றவாளிகள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது.
பொள்ளாச்சியில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு தமிழகத்தையே உலுக்கிய மாபாதக செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறை இப்படி அடிக்கவில்லை. நாகர்கோவிலில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட காசி போன்ற குற்றவாளிகளை காவல்துறை இப்படி அடிக்கவில்லை. ஊரடங்கு காலத்தில் தங்கள் வியாபார கடையை 10 நிமிடம் தாமதமாக மூடினார்கள் என்பதற்காக அப்பாவையும் மகனையும் அடித்து கொன்றிருக்கிறார்கள். இதற்கு கூட தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்காமல் உயிரிழந்த குடும்பத்திற்கு உதவி என்ற அறிவிப்போடு கடந்து செல்கிறது என்றால் அரசின் நோக்கத்தை எப்படி புரிந்து கொள்வது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தினசரி கூடிக் கொண்டிருப்பதை புரிந்துகொண்டு உயிரிழப்பு அதிகம் என்பதை அரசு ஒப்புக் கொண்டால்தான், அரசு இயந்திரம் தீவிரமாக செயல்படும். அரசினுடைய நடவடிக்கைகளை பார்த்து பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்படைந்து அமைதி இழந்து கொண்டிருக்கிறார்கள். அந்த உஷ்ணத்தை வெகுவிரைவில் தமிழக அரசு புரிந்து கொள்ளும். தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று அறிவித்த முதல்வர் மாவட்டம் மாவட்டமாக தானே ஊரடங்கை மீறி பயணிப்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
85,000 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு இழப்பு வரும் என்று அறிவிக்கிற முதல்வர் ஆயிரக்கணக்கான கோடிகளுக்கான திட்ட ஒப்பந்தங்களை முடிவு செய்வதன் அவசியம் என்ன? சாலை திட்டங்களும் கட்டிட திட்டங்களும் நிதி இல்லாத நேரத்தில் செயல்படுத்த முயல்வது அவசியமா? அதற்கு தேவையான வருமானத்திற்காகதான் உயிரிழப்பு அதிகமாகும் என்று தெரிந்திருந்தும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதா?” என்று காட்டமாக அறிக்கையில் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios