எதிரும் புதிருமாக இருந்த திமுக, அதிமுகவை காவிரி விவகாரம் இணைத்து வைத்துள்ளது. 

காவிரி விவகாரத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் இணைந்து செயல்படுவது ஆரோக்கியமான அரசியலாகவும் மக்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.

அதன்பிறகு அனைத்து கட்சி பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்காததை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 

நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் இணைந்து வலியுறுத்தினர். அமளியிலும் ஈடுபட்டனர். இவ்வாறு தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னையில் திமுகவும் அதிமுகவும் இணைந்து செயல்படுவது ஆரோக்கியமான அரசியலாகவே பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, வரும் 9ம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திமுக மற்றும் அதிமுக  எம்பிக்கள் கலந்துகொண்டனர். அரசியல் ரீதியாக எதிரும் புதிருமாக இருந்தாலும் தமிழகத்தின் பிரதான பிரச்னைக்காக இரண்டு கட்சிகளும் அரசியல் வேற்றுமையை மறந்து இணைந்து போராடுவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக எம்பிக்களான திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்டோரும் அதிமுக எம்பிக்களான அன்வர் ராஜா, நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோரும் இடதுசாரி எம்பிக்களும் கலந்துகொண்டனர்.