நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் திமுக 13 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆனால் அதிமுகவுக்கு தேவையான 9 தொகுதிகளை அதிமுகவுக்கே கொடுத்துவிட்டது. இன்னும் நான்கு அல்லது ஐந்து தொகுதிகளில் ஜெயித்திருந்தால், தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றியிருக்கும், அனால் 13 தொகுதிகளில் ஜெயித்தும் ஒரு பயனும் இல்லை, இந்த 9 தொகுதிகளில் தோல்வி குறித்து திமுக தலைமைக்கு புகார்கள் சென்று கொண்டிருக்கின்றன.

இதையடுத்து 9 தொகுதிகளில் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆராய திமுக தலைமை ஒரு குழுவை அமைத்துள்ளது. அதற்கான அறிவிப்பு  கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலியில் வெளியாகியிருக்கிறது.

அதில்; தலைமைக் கழக சட்ட ஆலோசகர் என்.ஆர். இளங்கோ தலைமையில், மொத்தம் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர், வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஒருவர் என இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவின் எப்போது ஆய்வை தொடங்க வேண்டும் ஆய்வுக்கான காலக்கெடு என்ன என்பது பற்றி பிறகு அறிவிப்பதாக திமுக தலைமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சாத்தூர், நிலக்கோட்டை தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினரான இ.கருணாநிதி, தலைமைக் கழக வழக்கறிஞர் வி. அருண் ஆகியோர் ஆய்வு செய்கிறார்கள். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர் ஆகிய தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, வழக்கறிஞர் நீலகண்டன், மானாமதுரை, விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் தோல்வியை ஆய்வு செய்ய ஜே.எல். ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, வழக்கறிஞர் பரந்தாமன்,பரமக்குடி, சூலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் காஞ்சிபுரம் எம்எல்ஏ. எழிலரசனும், வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

9 தொகுதி பறி போனது எப்படி?  9 தொகுதிகளில் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆராய ஆக்ஷனில் குதிப்பதாக அறிவாலயம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால்  மாசெக்கள் வேகனயில் உள்ளார்களாம்.