தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் அதே தேதியில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் தேதி வெளியானதால் அரசியல் கட்சி தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தையில் வேகமாக ஈடுபட்டுள்ளன. விருப்ப மனு தாக்கல் செய்துள்ளவர்களிடம் திமுக 3வது கட்ட நேர்காணலையும், அதிமுக ஒரே கட்டமாகவும் இன்று நேர்காணல் நடத்தி வருகின்றனர். 

தேமுதிக விருப்ப மனு விநியோகம் கடந்த பிப்ரவரி 25ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் விருத்தாச்சலம் தொகுதியில் கேப்டன் விஜயகாந்தும், விருகம்பாக்கத்தில் பிரேமலதா விஜயகாந்தும், அம்பத்தூரில் விஜய பிரபாகரனும் போட்டியிட வேண்டுமென தேமுதிகவினர் விருப்ப மனு அளித்தனர். இந்நிலையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடுவதற்காக முதன் முறையாக விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். 

சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், துணை செயலாளர் பார்த்த சாரதி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். அந்த கூட்டத்தில் எந்த தொகுதியில் போட்டி என்பதையே குறிப்பிடாமல் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு அளித்துள்ளார். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்றும், தேமுதிக தொண்டர்கள் அதிகம் விருப்பிய விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.