சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 3வது வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் களம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. கட்சி கொடிகளுடன் வாக்கு கேட்கச் செல்லும் தொண்டர்கள், வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் என தமிழகமே பரபரப்பாக காணப்படுகிறது. ஒருபக்கம் பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பாக வழிநடத்தி, ஜனநாயக திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. 

கடந்த 3 நாட்களாகவே ஆயிரத்தைக் கடந்து கொரோனா பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களை கடந்து தற்போது கொரோனா அரசியல் களத்திற்குள் புகுந்தது கட்சி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு முதன் முறையாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேளச்சேரி தொகுதி வேட்பாளரான சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட அவர் ஆன்லைன் வழியாக பிரசாரம் செய்ய திட்டமிட்டு வருகிறார். 

அதேபோல் இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் அண்ணா நகர் தொகுதி வேட்பாளரும், மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உதவியாளருமான பொன்ராஜ்க்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷூக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 3வது வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மேற்கு தொகுதியில் தேமுதிக சார்பில் அழகாபுரம் மோகன் ராஜ் போட்டியிடுகிறார்.கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட அவர், சென்னையில் உள்ல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.