எனக்காகப் பிரார்த்தனை செய்யும் தொண்டர்கள்தான் என்னுடைய முதல் கடவுள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உருக்கமாகப் பேசினார்.
சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது. தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் பொதுமக்களுடன் சேர்ந்து 101 பானைகளில் பொங்கல் வைத்து விழாவைக் கொண்டாடினர்.

 
பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பொருட்களை விஜயகாந்த் வழங்கி பேசுகையில், “நான் உடல் நலம் தேறிவர வேண்டும் என்று என் தொண்டர்கள் பிராதிக்கிறார்கள். எனக்காகப் பிரார்த்தனை செய்யும் தொண்டர்கள்தான் என்னுடைய முதல் கடவுள். விரைவில் பூரண உடல் நலம் பெற்று மீண்டு வருவேன்.” என்று உருக்கமாகப் பேசினார். பின்னர் பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளையும் விஜயகாந்த் தெரிவித்தார்.
பின்னர் விழாவில் பிரேமலதா பேசுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சிலர் குரல் எழுப்புகின்றனர். இந்தியா ஓர் இந்து நாடாக இருந்தாலும்கூட இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்வார்கள். இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் யாரும் ஈடுபடக் கூடாது. தலைவர் விஜயகாந்துக்கு அனைத்து மதமும் ஒன்றுதான். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் தேமுதிக வெற்றி பெற்றுள்ளது. இதனால் எங்களுடைய ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக இடங்களில் வெல்ல கடுமையாக உழைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.