ராஜ்ய சபா தேர்தலில் அதிமுகவிடமிருந்து ஒரு சீட்டைப் பெறும் வகையில் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே. சுதிஷ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் 6 ராஜ்ய சபா எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2 அன்று முடிவடைய உள்ளது. புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் மார்ச் 26 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போதுள்ள கட்சிகளின் உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 உறுப்பினர்கள் கிடைப்பார்கள். கடந்த ஆண்டு நடந்த ராஜ்ய சபா  தேர்தலில் ஓரிடத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திமுக ஒதுக்கியது. இரண்டு இடங்களில் மட்டுமே திமுக தங்களுடை கட்சியினரை நிறுத்தியது. இந்த முறை 3 எம்.பி. பதவிகளுக்கும் திமுகவினரே நிறுத்தப்பட உள்ளனர். 
ஆனால், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவும் தமாகாவும் ஓரிடத்தை அதிமுகவிடம் கேட்டுவருகின்றன. ராஜ்ய சபா சீட்டுக் குறித்து கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தேர்தல் பேச்சுவார்த்தையின்போதே பேசப்பட்டது என்றும் அதிமுக தங்களுக்கு ஓரிடத்தை வழங்க வேண்டும் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கோரிவருகிறார். தேமுதிகவுக்கு சீட்டு வழங்குவது குறித்து கட்சி தலைமைக் கழகம் முடிவெடுக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
3 சீட்டுகளைப் பெற அதிமுகவிலேயே பலரும் முட்டிமோதும் வேளையில், தேமுதிகவுக்கு அதிமுக ஓரிடத்தை வழங்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் ராஜ்ய சபாவுக்கு ஓரிடத்தைப் பெறும் வகையில், தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே. சுதிஷ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சுதீஷ் சந்தித்து பேசி, தங்களுக்கு ஓரிடத்தை ஒதுக்கும்படி கோரியதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.