கடந்த 10 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்த அதிமுக சொத்து வரியை உயர்த்தவில்லை. ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே திமுக அரசு அதிரடியாக சொத்து வரியை உயர்த்திருப்பது கண்டிக்கதக்கது.  

விடியலை தரப்போகிறோம் என சொல்லிவிட்டு மக்களுக்கு விடிவு காலமே இல்லாத நிலையை திமுக தலைமையிலான தமிழக அரசு ஏற்படுத்திவிட்டது என்று தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகள் போட்டி

இதுதொடர்பாக விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், தற்போது சொத்து வரியை தமிழக அரசு உயர்த்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மக்களின் துயரங்களை போக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டு கொண்டு விலைவாசியை உயர்த்தி, அப்பாவி மக்களிடம் இருந்து பெருந்தொகையை கொள்ளையடித்து வருகின்றன. 

விடிவு காலம் இல்லை

விடியலை தரப்போகிறோம் என சொல்லிவிட்டு மக்களுக்கு விடிவு காலமே இல்லாத நிலையை திமுக தலைமையிலான தமிழக அரசு ஏற்படுத்திவிட்டது. கடந்த 10 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்த அதிமுக சொத்து வரியை உயர்த்தவில்லை. ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே திமுக அரசு அதிரடியாக சொத்து வரியை உயர்த்திருப்பது கண்டிக்கதக்கது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சொத்து வரியை உயர்த்தி மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை திமுக அரசு செய்துவிட்டது. மத்திய அரசுக்கு நிகராக மாநில அரசும் மக்கள் மீது பொருளாதார சுமையை திணிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

சொத்து வரி உயர்வு வேண்டாம்

அனைத்து பகுதியிலும் அடிப்படை வசதிகள் கொஞ்சமும் மேம்படுத்தவில்லை. நகர்பகுதிகளில் சாலை, தெருவிளக்கு, தெருக்களில் வடிகால் வசதி மற்றும் சுத்தமான குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாத நிலையில் சொத்து வரியை உயர்த்துவது சரியா? அரசு கஜானாவை நிரப்ப பொதுமக்கள் வயிற்றில் அடிப்பது என்ன நியாயம்? ஏற்கனவே தண்ணீர் வரி, சாலை வரி, பாதாள சாக்கடை வரியை கட்ட முடியாமல் மக்கள் தவிக்கும் நிலையில் சொத்து வரியை உயர்த்திருப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கம் செயல். மேலும் சொத்து வரி உயர்வால் வாடகை வீடுகள் மற்றும் கடைகளின் கட்டணமும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உயர்த்தப்பட்ட சொத்து வரியை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.