கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுக எங்களுக்கு சீட்டு தரவேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் அதிரடியாக கோரிக்கை வைத்துள்ளார்.   கூட்டணி ஒப்பந்தத்தின் போது  பேசியபடி ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை தேமுதிகவுக்கு அதிமுக வழங்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார் .  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார் .  அப்போது பேசிய அவர் ,  இந்திய குடியுரிமை சட்டத்தை பொருத்தமட்டில் அந்த சட்டம் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை . அச்சட்டத்தின் நிலை என்ன அதனால் என்ன நடக்கும் என்பதை மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு விளக்க வேண்டும் என்றார். 

மேலும் இந்தச் சட்டத்தால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என பிரதமர் முதல்வர் தெரிவித்துள்ள நிலையில் அதை நாங்கள் நம்புகிறோம் .  இச்சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு  சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட தேமுதிக முதல் ஆளாய் களத்தில் இறங்கும் எனக் கூறிக் கொள்கிறேன் .   அதிமுகவுடன் தேமுதிக  கூட்டணி அமைக்கும் போதே நாங்கள் தெளிவாக பேசி இருந்தபடி ,  கூட்டணி தர்மத்தை தேமுதிக முழுமையாக கிடைத்திருக்கிறது . அதேபோல முதல்வரும் கூட்டணி தர்மத்துடன் நிச்சயமாக ஒரு ராஜ்யசபா எம்பி பதவி எங்களுக்கு தருவார் என்று எதிர்பார்க்கிறோம் . கூட்டணி  முடிவாகும் போதே நாங்கள் அதை கேட்டு இருக்கிறோம் என்றார். 

அப்போது கூறிய முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் ,  சீட்  வழங்குவது குறித்து  பின்னால் பார்ப்போம் என்று தெரிவித்திருந்தனர் . ஆனால் இப்போது அது பற்றி எதுவும் திட்டவட்டமாக தெரியவில்லை ,  அதனால் தான் நான் கூறுகிறேன் கூட்டணி தர்மத்தை நாங்கள் மதிக்கிறோம் அவர்களும் கூட்டணி தர்மத்தை மதிக்க வேண்டும் என்று என்றார்.   அந்த தர்மத்தின் அடிப்படையில் எங்களுக்கு சீட் தர வேண்டும் இது குறித்து என்ன அவர்கள் நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .  அதேநேரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தங்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக தர வேண்டும் என கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .