கட்சி ஆரம்பித்தபோது எழுச்சியுடன் பலமான கட்சிகளையே தனது தொண்டர்கள் பலத்தால் மிரட்டிய தேமுதிக இப்போது பேரம்பேசி அவமானத்தை தேடிக் கொள்ளும் அளவுக்கு தேயும் முன்னேற்ற திராவிடர் கழகம் என கிண்டலடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை அலசி ஆராய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அக்கட்சி. ஆனாலும் அட்ராசிட்டியை குறைத்துக் கொள்ளாத பிரேமலதாவால் கட்சிக்குள்ளும், கூட்டணி பேசும் கட்சிகளிடமும் தேமுதிகவின் நிலை இன்னும் கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.  

கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கப்பட்டு முரசு கொட்டியது. இந்த கட்சிக்கு வெகு சில நாட்களிலேயே நல்ல அடையாளம் கிடைத்தது. ஆரம்பத்தில் மக்களுடனும், தெய்வத்துடனும்தான் கூட்டணி எனக் கூறி வந்த விஜயகாந்த் தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தே களமிறங்கினார். கறுப்பு எம்ஜிஆர் என வர்ணிக்கப்பட்ட விஜயகாந்த் தேமுதிக கட்சியை நிறுவி, வழி நடத்தி வருகிறார். தனித்து நின்று தமிழக முதல்வர் இருக்கையை வசப்படுத்த முடியாது என கணக்குப்போட்ட விஜயகாந்த் பலம் வாய்ந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து விடலாம் என முடிவுக்கு வந்தது. 

2011 சட்டப்பேரவை தேர்தலில், மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக தனிப்பெரும் எதிர்கட்சி அந்தஸ்துடன் தோள் தூக்கி நின்றது. இது திமுகவிற்கு மிகப்பெரிய அடியாகவும் தலைவலியாகவும் அமைந்தது. 29 என்ற அசைக்க முடியாத பலத்துடன் சட்டப்பேவை எதிர்கட்சி தலைவராக அடியெடுத்து வைத்தார் விஜயகாந்த். இந்தத்தேர்தலின் போது தேமுதிகவை அதிமுக வசம் இழுத்தது தான் ஜெயலலிதாவின் ராஜதந்திரம் எனக் கூறினர் அரசியல் விமர்சகர்கள்

.

அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் இருக்கும்போதே தனது நாக்கைக் துருத்திக் காட்டி கோபப்பட்ட விஜயகாந்தால் சட்டப்பேரவை அமளிதுமளியானது. அதிமுக - தேமுதிக இடையிலான மனக்கசப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க, இந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. பிறகு, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக வெற்றியை வசப்படுத்தியது. இந்தத் தேர்தலில் தேமுதிகவின் ஆதரவு அதிமுகவிற்கு இல்லை. மறுபுறம், திமுக வரலாறு காணாத எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு பலம் பொருந்திய எதிர்கட்சியாக சட்டப்பேரவையில் அமர்ந்தது. 

2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாலும், அதிமுக-வுடன் ஏற்பட்ட வார்த்தை மோதல் காரணமாகவும் தேமுதிக தனித்து விடப்பட்டது. இருப்பினும், தேமுதிகவின் வாக்கு வங்கி 2011-ல் இருந்ததை விட பெரும் சரிவை கண்டது. அப்போது வைகோ ஆட்டம் ஆரம்பித்தது. தேமுதிக, மறுமலர்ச்சி திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் உட்பட பல கட்சிகளை ஒன்றிணைத்து மக்கள் நலக் கூட்டணி என்ற ஒரு கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்க ஆயத்தமானார் வைகோ. 

இந்த கூட்டணி ஒருவேளை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றால் முதல்வர் பதவி விஜயகாந்த்திற்கே அளிக்க கூட்டணியில் இருந்த வைகோ உட்பட அனைவரும் சம்மதித்தனர். இதனால், அதிமுக மற்றும் திமுக வசம் செல்ல வாய்ப்பு கிடைத்தும் விஜயகாந்த அந்த வாய்ப்புகளை புறந்தள்ளிவிட்டு மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தார்.

முதல்வர் கனவுடன் இந்த கூட்டணியில் இணைந்த விஜயகாந்துக்கும், ஆட்சியை பிடிக்க ஆசை கொண்டிருந்த மக்கள் நலக்கூட்டணிக்கும் கடைசியில் மிஞ்சியது என்னவோ மிகப்பெரிய ஏமாற்றம் தான் 104 தொகுதிகளில் நின்று அத்தனை இடங்களிலும் மோசமான தோல்வியை தழுவியது தேமுதிக.136 தொகுதிகளில் அதிமுக கூட்டணியும், 98 தொகுதிகளில் திமுக கூட்டணியும் வெற்றி பெற, மக்கள் நலக்கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. இதனால், விஜயகாந்த் அவரது வாழ்நாளில் எடுத்த மிகப்பெரிய தவறான முடிவாக பார்க்கப்பட்டது. 

இந்த படுதோல்வியைத் தொடர்ந்து விஜயகாந்தின் உடல்நலனில் சற்று பின்னடைவு ஏற்பட்டதால் தேமுதிக வாக்கு வங்கி அஸ்தமனமாகி விட்டதாக அரசியல் வட்டாரத்தில் கருதப்பட்டது. கேப்டனின் மகன் விஜய பிரபாகரனோ, கூட்டணி குறித்த அதிரடி கருத்துக்களை அள்ளி வீசினார். மக்களவை தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு போய், எப்படியாவது தேமுதிக கூட்டணி வைத்தால் போதும் என்ற நிலை உருவாகி விட்டது. 

ஆனால், தனித்து விடப்பட்ட கப்பல் போல, எந்த கரையும் சேர முடியாமல், தேர்தல் கடலில் தத்தளித்து வருகிறது தேமுதிக. இக்கட்சி அதன் பலத்தை இழந்து இந்தளவு பலவீனமானதற்கு யார் காரணம் என்பதை தமிழக மக்கள் நன்றாகவே அறிவார்கள். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் தவறாக எடுக்கும் ஒரு முடிவு ஒட்டுமொத்தமாக அழிவை நோக்கியே செல்லும் என்பதற்கு சமீபத்தியா ஆகச்சிறந்த எடுத்துக் காட்டு தேமுதிக. 

கடந்த 2012ம் ஆண்டு சட்டப்பேரவையில் ஜெயலலிதா இப்படி சொன்னார். ‘’தேமுதிகவுக்கு வர வேண்டிய ஏற்றம், வரக்கூடிய ஏற்றம் எங்களால் வந்து முடிந்து விட்டது. இனிமேல் அவர்களுக்கு இறங்கு முகம்தான். அதைச் சரித்திரம் சொல்லும்” என்று ஜெயலலிதா கூறியது இப்போது நிகழ்ந்து வருகிறது.