அதிகாலை சென்னைக்கு வந்த விஜயகாந்த் சுமார் 7 மணி நேரம் வரை சென்னை ஏர்போர்டில் கார்த்திருந்து 11 மணிக்கு வீடு சென்றார். விஜயகாந்த்தைப் பார்க்க தொண்டர்கள் கால்கடுக்க ஏர்போர்ட்டில் காத்திருந்தும் அவரை நேரில் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று  ஏமாற்றத்தோடு போய்விட்டனர்.

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த் உடல்நலம் தேறி இன்றைய தினம் வருவார் என்று நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேபோல இன்று அதிகாலை சென்னை ஏர்போர்ட் வந்தடைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் விஜயகாந்தை வரவேற்க நேற்று மாலை முதல் தடபுடலாக ஆரம்பித்துவிட்டது. அதேபோல, மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஏர்போர்ட்டில் நேற்றிரவே தொண்டர்கள் குவிய ஆரம்பித்தனர்.  

பிரான்சில் இருந்து விமானம் மூலம் சரியாக அதிகாலை 1.15 மணிக்கு விஜயகாந்த் வந்தார். ஆனால் உடனடியாக அவர் வீடு திரும்பவில்லை. சென்னை ஏர்போர்ட்டில் ஓய்வு அறையிலேயே தங்கி இருந்திருக்கிறார். அதுவும் கிட்டத்தட்ட 7 மணி நேரம் தங்கியிருக்கிறார். மனைவி, மகனுடன் ஏர்போர்ட்டிலேயே காலை டிபன் சாப்பிட்டுவிட்டுதான் கிளம்பி சென்றிருக்கிறார்.

விஜயகாந்த் இப்படி ஏர்போர்ட்டில் 8 மணி வரைக்கும் தங்க போகிறார் என்ற தகவல் நேற்றிரவே கட்சிக்காரர்கள் மத்தியில் பரவியது. அவர் சுமார் 7 மணி நேரம் அங்கேயே தங்கக் காரணம், சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பிய அவரை நல்ல நேரம் பார்த்துதான் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என  குடும்பத்தாரின் எண்ணம் அதனால் விஜயகாந்த் ஏர்போர்ட்டில் தங்கியதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு விமானநிலையத்தில் இருக்கும் நான்கு சக்கர பேட்ரி வாகனத்தில் விஜயகாந்த் வெளியே வந்த அவருக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதற்கிடையில், சுமார் 11 மணிக்கு மியாட் மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் விமானநிலையத்துக்கு வந்தனர். விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று அயற்சி ஏற்பட்டதன் காரணமாக,  வெளியில் வர தாமதம் ஏற்பட்டது என சொல்லப்படுகிறது. விமானநிலையத்திலிருந்து வெளியே வந்த அவரை, வேனில் சாலிகிராமத்திலுள்ள தனது இல்லத்துக்குச் சென்றார்.

கடந்த சில மாதங்களாக, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தலைவரை, அதே பழைய நிலையில் பார்த்துவிட மாட்டோமா என தவித்த, தொண்டர்களால் விஜயகாந்தை நேரில் பார்க்க முடியாமல் சோகத்துடன் திரும்பிச் சென்றனர்.