தேர்தல் அரசியலில் தேமுதிக தொடர்ந்து பின்னடைவை சந்தித்துவரும் நிலையில், மத்திய அரசில் வாரிய தலைவர் பதவி ஒன்றை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்றது. அதன்பிறகு 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டப்பேரவைத் தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக படுதோல்வியைச் சந்தித்தது. அடுத்துவரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தேமுதிக மட்டுமே கூறிவருகிறது. ஆனால், அதிமுக தரப்பிலிருந்து எந்த அறிவிப்புமே வரவில்லை.
 நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவைபோல தோல்வியடைந்த பாமக, அதிமுக உதவியோடு ஒரு ராஜ்ய சபா சீட்டைப் பிடித்துவிட்டது. அக்கட்சியின் அன்புமணி மீண்டும் எம்.பி.யாகிவிட்டார். ஆனால், தேமுதிகவுக்கு எந்தப் பதவியுமே கிடைக்கவில்லை. குறிப்பாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் எல்.கே. சுதிஷ் 2009, 2014, 2019 என 3 நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளார். இந்தத் தோல்வியால் அவர் விரக்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில் எம்.பி. பதவி கிடைக்காவிட்டாலும், மத்திய அரசின் ஏதேனும் ஒரு வாரிய தலைவர் பதவியைப் பெறுவது என்ற முடிவுக்கு அக்கட்சி வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.  நாடாளுமன்றத்தேர்தலின் போது தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் இதுதொடர்பாக சுதிஷ் பேசிவருவதாகவும் சொல்லப்படுகிறது.  தமிழகத்தில் அதிமுக  - பாஜக கூட்டணியில் தேமுதிக சேர தானே காராணம் என்றும் பாஜகவோடு தொடர்ந்து தோழமையாக இருக்க மத்திய அரசின் ஏதாவது ஒரு வாரிய தலைவர் பதவியைக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன. ஆனால், இதற்கெல்லாம் பாஜக மசியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி!