விஜயகாந்த்துக்காக தேமுதிக மீது வைத்திருந்த  கொஞ்ச நஞ்ச மரியாதைக்கு நூறாக உடைந்திருக்கிறது. ஊடகங்கள் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் தேமுதிகவை வறுத்தெடுப்பதை விட பிரேமலதாவையும், மைத்துனர் சுதீஷையும் கிழித்து தொங்க விடுகின்றனர். துட்டுக்காகவும், ஒன்னு ரெண்டு சீட்டுக்காகவும் இரண்டு கட்சிகளிடம் மட்டுமல்ல தினகரனிடமும் கூட்டணி பேரம் பேசியதால், தேமுதிக இமேஜ் டேமேஜாகியிருக்கிறது. 

கடந்த சில நாட்களாக தேமுதிகவில் நடக்கும் பேர அரசியலை அரசியல் கட்சினர் மட்டுமல்ல, தேமுதிகவில் இருப்பவர்களே கண்டபடி திட்டும் அளவிற்கு தங்களது சுயரூபத்தை காட்டிக் கொண்டுள்ளது. விஜயகாந்த்தின் மனைவி ஒரு பக்கம் அரசியலை கவனித்து வந்தாலும்,கூட்டணி பேரம் பேசும் பொறுப்பு என்னவோ மைத்துனர் சுதீஷ் தான் கவனித்து வருகிறார், இன்னொரு பக்கம் விஜயகாந்த்தின் மகன் மகன் விஜயபிரபாகரன் மேடைகளில் மரியாதை இல்லாமல் வெச்சு கிழித்தெடுக்க , இவர்கள் அரசியலில் கத்துக்குட்டி தான் என்பது தெள்ளது தெளிவாகவே புரிந்தது.

இதன் உச்சகட்டமாக நேற்று முன்தினம் செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா அரசியலில் கத்துக்குட்டியாகவே இருப்பதுதான் வெளிபட்டுள்ளது. அவர் நடந்து கொண்ட விதமாக இருந்தாலும் சரி, செய்தியாளர்களிடம் கோபப்பட்டு எகிறியது இருந்தாலும் சரி, கூட்டணி கண்டிப்பாக வைப்போம் என்று சொல்லி கொண்டிருக்கிற அதிமுகவையும், பாஜகவையும், அவர் விமர்சனம் செய்த விதமானாலும், இவை எல்லாமே பிரேமலதா அரசியலில் அரிச்சுவடி கூட தெரியாதவர் என்பதுதான் தெளிவாகியுள்ளது.

இது எல்லாத்தையும் விட நாம இருந்த இயக்கம் இப்படி மாறி மாறி கூட்டணி பேரம் பேசி, பணத்துக்காக கேவலப்பட்டு, போகுதேன்னு தேமுதிகவில் இருந்தவர்களும், விஜயகாந்த் மீது அளவற்ற விசுவாசமாக இருந்தவர்களும் கொதித்துப் போயுள்ளது நன்றாகவே தெரிகிறது.

விஜயகாந்த்தை முந்தைய காலங்களில் கூடவே இருந்த பார்த்து வந்த தே.மு.தி.கவின் முன்னாள் முக்கியப் புள்ளியும், இன்னாள் தி.மு.க பிரமுகரான வி.சி.சந்திரகுமார்; முன்னணி வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தனது தலைவரான விஜயகாந்த்தைப் பற்றி பல திடுக் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழக அரசியலிலும், தனது கட்சியில் நடக்கின்ற விஷயங்கள் ஒருசிலவை கேப்டனுக்கு தெரிந்திருக்கலாம். தெரிந்திருந்தாலும், ஒருசில விஷயங்களை பிரேமலதாவை மீறி கேப்டனால் ஒன்றுமே செய்ய முடியாது. நடக்குறது எல்லாம் கேப்டனுக்கு தெரியும். ஆனா, எல்லாத்தையும் வேற மாதிரி திசை திருப்புவாங்க. அவரை டி.வி பார்க்க, பேப்பர் படிக்க விடுவதே இல்லை. இவங்க சொல்றது தான் செய்தி. இவங்க சரியாக இருந்த மாதிரியும், திமுக மேல கோபத்தை வரவைக்கிற மாதிரி சொல்லி வைப்பாங்க. 

விஜயகாந்த்தின் அஜாக்கிரதை, அளவுக்கு மீறிய குடும்ப பாசம் எல்லாம் தான் இன்றைக்கு தேமுதிகவை இப்படி நிறுத்தியிருக்கு. ஒருபக்கம் நாம இருந்த இயக்கம் இப்படி வீணா போகுதேன்னு வருத்தம் இருந்தாலும், அவர் உடம்பு சரியில்லாம இருக்க இந்த நேரத்துல அவரை எதிர்த்து பேசுற சூழ்நிலை உண்டானதை நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு என்றார்.

விசி சந்திரகுமார்  சொன்னதையே தேமுதிகவில் இருக்கும் பலரும் விஜயகாந்த்தின் நிலையை கண்டு தங்களது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.