உள்ளாட்சித் தேர்தல்  தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அக்கூட்டணியில் முதல் கட்சியாக தேமுதிக குழுவை அறிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஆளும் அதிமுக விருப்ப மனுக்களை பெறத் தொடங்கியதும், மற்ற கட்சிகளும் தேர்தல் முஸ்தீபுகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டன. திமுக சார்பிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுவருகின்றன. இதேபோல அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுவருகின்றன. இதற்கான மனுக்கள் வினியோகத்தை தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தொடங்கிவைத்துள்ளார்.
சென்னையில் கட்சி தலைமை அலுவலகமான கோயம்பேட்டிலும் பிற மாவட்டங்களில் உள்ள கட்சி அலுவலகங்களிலும் விருப்ப மனுக்களைப் பெற தேமுதிக ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பணியைத் தொடங்கி வைத்த கையோடு, உள்ளாட்சித் தேர்தலில் இடங்களைப் பெறுவது தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழுவையும் விஜயகாந்த் நியமித்துள்ளார். இக்குழுவில்  மாநில துணை செயலாளர் சுதீஷ், முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, அவை தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலர் மோகன்ராஜ், அக்பர்  ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


ஆனால், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிமுக சார்பில் குழுவே இன்னும் அறிவிக்கவில்லை. குழு எப்போது அறிவிக்கப்பட்டும் என்பது பற்றியும் உறுதியாகத் தெரியவில்லை. அதற்குள் தேமுதிகவில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக குழு அமைத்தாலும், அதிமுகவில் குழு அமைக்கப்பட்ட பிறகே பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியும். உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக பணிகளை முன்னெடுத்து வருவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 
 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக பாமக 7 +1 என்ற தொகுதிகளைப் பெற்றுக்கொண்டுபோனது. இது தேமுதிகவுக்குக் கடும் அதிர்ச்சியாக அமைந்தது. நீண்ட இழுபறிக்கு பிறகே அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பிடித்தது. உள்ளாட்சித் தேர்தலில் அப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே பணிகளை  தேமுதிக முடுக்கிவிட்டுள்ளது. 2 மேயர் சீட்டுகள், 20 சதவீத இடங்களை அதிமுகவிடம் பெற தேமுதிக திட்டமிட்டுள்ளது.