தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரனை அக்கட்சியின் கொள்ளை பரப்புச் செயலாளராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தேமுதிக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தேமுதிக மாநாடு நடைபெற்றது. அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக திருப்பூரில் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் கேப்டன் உடல் நிலையால் அந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது. தற்போது செப்டம்பர் 15-ம் தேதி திருப்பூரில் தேமுதிக மாநில மாநாட்டை நடத்துகிறது. 

தொடர் தேர்தல் தோல்வி, கேப்டன் உடல் நிலை பாதிப்பு, தேமுதிக பொருளாளராக பிரேமலதாக பதவி ஏற்பு, தேமுதிகவின் பிரச்சார பீரங்கியாக விஜயபிரபாகரன் உருமாற்றம் போன்ற பல விஷயங்களை தொடர்ந்து முதல் முறையாக இந்த மாநாடு நடைபெற உள்ளது. தேமுதிகவின் வாக்கு வங்கி அதள பாதாளத்தில் இருக்கும் நிலையில் இந்த மாநாடு நடைபெற உள்ளதால் கூட்டம் எப்படி இருக்கும் என்கிற ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

மேலும், பேசுவதற்கு குரல் ஒத்துழைக்கவில்லை என்பதால் விஜயகாந்த் பேசியே பல நாட்கள் ஆகிவிட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது சைகை மூலம் தான் அவர் வாக்கு சேகரித்தார். ஆனால் செப்டம்பர் 15 மாநாட்டில் விஜயகாந்த் பேச உள்ளதாக கூறுகிறார்கள். இதற்காக அவருக்கு காலை மாலை என இரண்டு வேலை ஸ்பீச் தெரப்பி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கேப்டன் மாநாட்டில் பேசுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

 இதனிடையே மாநாட்டின் ஹைலைட்டாக விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரனுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைக்கு தேமுதிகவின் பிரச்சார பீரங்கியாக மட்டுமே விஜயபிரபாகரன் செயல்பட்டு வருகிறார். அவரது உழைப்பிற்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையிலும் அவரை கட்சியின் முன்னிலைப்படுத்தும் வகையிலும் பதவி வழங்கப்படலாம் என்று சொல்கிறார்கள்.

அந்த வகையில் சந்திரகுமார் தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி காலியாக உள்ளது. அந்த பதவி விஜயபிரபாகரனுக்கு கொடுக்கப்படும் என்று பேசிக் கொள்கிறார்கள். மாநாட்டின் இறுதியிலோ அல்லது மாநாடு முடிந்த பிறகோ இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.