விக்ரவாண்டி  சட்டமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதையடுத்து அதன் கூட்டணி கட்சியான தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்துள்ளார். விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

 

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இது முன்னோடி  தேர்தல் என கருதப்படும் நிலையில் அதிமுக இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றி இருப்பது அதிமுக தொண்டர்களுக்கும் அதன் தலைமைக்கும் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதிமுக வெற்றி பெற தொகுதியில் பிரச்சாரம் செய்த கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உடல்நலம் நலிவுற்றுள்ள நிலையிலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விக்ரவாண்டி  சட்டமன்றத் தொகுதியில் இறுதி நாளான்று பிரச்சாரம் செய்தார். இது அதிமுகவின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி செய்தி வந்த கையோடு தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொலைபேசியில் அழைத்து அவருக்கு நன்றி கூறியதுடன் தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துக்  கொண்டதாக தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தி  அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழு விவரம் :- தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிறந்த முறையில் பிரச்சாரம் செய்தமைக்காக எனக்கும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் நன்றியையும் தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.  

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி  பெற்ற அதிமுக வேட்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும் விக்கிரவாண்டி நாங்குநேரியில் அமோகமான வெற்றியைத் தந்த தொகுதி மக்களுக்கும் கூட்டணி கட்சியினருக்கும் தேமுதிக சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  அதேபோல வெற்றிக்காக பாடுபட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.