தேமுதிகவில் திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளரை அதிரடியாக நீக்கி, புதிய நிர்வாகியை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளரும், ராதாபுரம் தொகுதி வேட்பாளருமான ஜெயபாலன் (60) இவர் கட்சியில் இருந்து விலகியதோடு தலைமை மீது புகார் தெரிவித்து ஆடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் பொருளாளர் பிரேமலதா, சுதீஷ் பிரசாரம் செய்யவில்லை. தேர்தல் பணிகள் குறித்து போனில் கூட விசாரிக்கவில்லை குற்றம்சாட்டி இருந்தார். இவரது பேச்சு கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், கட்சியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திருநெல்வேலி புறநகர் தேமுதிக மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந்த கே.ஜெயபாலன், கட்சியின் பதவியில் இருந்து விடுக்கப்படுகிறார். மேலும், இந்த பதவிக்கு புதிய பொறுப்பாளராக வி.வேலாயுதம் நியமிக்கப் படுகிறார். 

இவருக்கு கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து, கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.