தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களின் பெயரை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தொகுதிகளில் போட்டியிடுபவர்களுக்கு அக்.26ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, வாக்குப்பதிவு நவம்பர் 19-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 22-ம் தேதியும் நடைபெறுகின்றன.
இதனிடையே, திமுக சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களும், அதிமுக சார்பில் அதிமுக வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
அரவக்குறிச்சியில் -அரவை முத்து,
தஞ்சையில் - வி.அப்துல்லா சேட்,
திருப்பரங்குன்றத்தில் - தனபாண்டியன்
ஆகியோர் தேமுதிக சார்பில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற இடைத்தேர்தலில் வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒதுங்கி கொண்டுள்ள நிலையில், தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் வேட்பாளர்களை அறிவித்துள்ளார் விஜயகாந்த்.
மீண்டும் பழையபடி களத்தில் குதித்து தொகுதிக்கு தலா 10,000 ஓட்டாவது வாங்கிவிட வேண்டும் என ஒரு முடிவோடு களம் இறங்கி உள்ளதாக தேமுதிக வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளன.
